படிப்பும் தேர்வும் மட்டும்தான் வாழ்க்கையா? – மாணவர்களுக்கு அதானி அட்வைஸ்!

Published On:

| By Kumaresan M

படிப்பும் தேர்வும் மட்டும் வாழ்க்கையல்ல… அதையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் ஜே.இ.இ மெயின் தேர்வில் தோல்வியடைந்ததால் அதீதி மிஸ்ரா என்ற 18 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், ‘அப்பா அம்மா என்னை மன்னியுங்கள். உங்கள் கனவை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எனக்காக அழாதீர்கள். தங்கையை நன்கு பார்த்துக் கொள்ளுங்கள். அவள் உங்கள் கனவை நிறைவேற்றுவாள் ‘ என்று கூறியிருந்தார். இந்த கடிதம் வைரலாகியது.

அதீதியின் இறப்பு அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியையும் கலங்கடித்துள்ளது. இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘எதிர்பார்ப்பு, பிரஷ்ஷர் தாங்காமல் மகள்கள் இப்படி ஒரு முடிவை எடுப்பது என் மனதை மிகவும் பாதித்துள்ளது. எந்த தேர்வையும் விட வாழ்க்கை மிகப் பெரியது. பெற்றோர் இதனை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் வாழ்க்கையை புரிய வைக்க வேண்டும். தேர்வில் தோற்பது இறுதியானது அல்ல. வாழ்க்கை எப்போதுமே இரண்டாவது ஒரு வாய்ப்பை தரும்” என்று தெரிவித்துள்ளார்.

கவுதம் அதானி 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்தான். மும்பையிலுள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்பட்டார். ஆனால், இடம் கிடைக்கவில்லை. அத்துடன், படிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தொழிலில் இறங்கினார். இப்போது, 220 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள அதானி குழுமத்தை நடத்தி வருகிறார். அதானிக்கு படிக்க சீட் கொடுக்காத அதே கல்லூரி சமீபத்தில் அவரை தங்கள் கல்லூரிக்கு அழைத்து மாணவர்களிடத்தில் உரையாட வைத்தது.

இதுதானே உண்மையான வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share