இந்தியத் தொழிலதிபர் கவுதம் அதானி, உலக பணக்காரர் தரவரிசை பட்டியலில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தனது கல்லூரி படிப்பைப் பாதியில் நிறுத்திய கவுதம் அதானி, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை துறைமுகம், நகர-எரிவாயு விநியோகம் மற்றும் நிலக்கரி சுரங்கம் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்.
இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்திருந்தார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் அதானி, முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, அதானி ஆசியப் பணக்காரர்கள் பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறினார். 2020 ஆம் ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 10 ஆவது இடத்திலிருந்தார். 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலக பணக்காரர்கள் பட்டியலில் 4 ஆவது இடத்திற்கு முன்னேறினார்.
தற்போது, புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசை பட்டியலின் படி, இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார்.
டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்திலும், அமேசான் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெசோஸ்153 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். இதன்மூலம் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் அமெரிக்கா இருக்கின்றது.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் முதல் மூன்று இடங்களுக்குள் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த நபர் நுழைவது இதுவே முதல் முறையாகும்.
91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.
மோனிஷா