வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறையும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 30) முதல் அமலுக்கு வந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்காக உயர்ந்த சிலிண்டர் விலை உயர்வை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மத்திய பாஜக அரசை குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைப்பதற்கு நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும் உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு ரூ.400 வரை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சிலிண்டர் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இது குறித்து பிரதமர் மோடி, “ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாள். கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மோனிஷா