அணு ஆயுதங்களை பயன்படுத்தினால்… ரஷ்யாவை எச்சரித்த ஜி-7 நாடுகள்!

Published On:

| By Monisha

உக்ரைன் போரில் ரசாயனம், அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க வேண்டி இருக்கும் என ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஜப்பான் நாட்டில் கரூய்ஜவா நகரில் ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு நடந்தது.

இதில் ஜி-7 உறுப்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் கூட்டத்தில் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் பின்னர் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கும் மூன்றாவது நபரை தடுக்கும் வகையில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம்.

உக்ரைன் போருக்கு ஆதரவு தெரிவிப்போருக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்.

உக்ரைன் மீது நடத்தப்படும் போரானது ஒரு தீவிர சர்வதேச சட்ட விதிமீறலை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் இருந்து உடனடியாகவும், நிபந்தனையின்றியும் அனைத்து படைகள் மற்றும் தளவாடங்களை ரஷ்யா திரும்ப பெற வேண்டும்.

உக்ரைன் போரில் ரசாயனம், உயிரி ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான விளைவுகளை ரஷ்யா சந்திக்க வேண்டி இருக்கும் என்று ஜி-7 நாடுகள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதேபோன்று ஆப்கானிஸ்தான் விவகாரம், ரஷ்யாவின் படையெடுப்பு உட்பட மண்டல அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஜி-7 நாடுகள் தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள உறுப்பினராக செயல்படும்படி சீனாவையும் கேட்டு கொண்டுள்ளது.

சமீபத்தில், பெலாரஸ் நாட்டு எல்லை அருகே அணு ஆயுதங்களை குவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது என தகவல் வெளியானது.

ரஷ்ய தூதர் வெளியிட்ட இந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்ய அதிபரும் அதை மேற்கோள் காட்டி பேசியிருந்தது உலக நாடுகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில் இதற்கும் ஜி-7 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

புழல் ஏரிக்கரையை பாதுகாக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share