டெல்லி மாநகராட்சி கவுன்சில் பிப்ரவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் 29 நாடுகள் பங்கு பெறும் உலகளவிலான பிரமாண்டமான ஜி20 உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த உணவுகளைச் சுவைத்துப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
2023-ம் ஆண்டு உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி20 மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது.
இதையடுத்து இந்தியாவில் உள்ள 200 நகரங்களில் பல்வேறு தலைப்புகளில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்கள் நடக்கின்றன.
சமீபத்தில் சென்னையிலும் புதுச்சேரியிலும் ஜி20 மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஜி-20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் பல்வேறு நாடுகளின் உணவைப் பற்றி அறிந்து கொள்ளவும், சுவைத்துப் பார்க்கவும் பிரமாண்ட உலக அளவிலான ஜி20 உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது டெல்லி மாநகராட்சி கவுன்சில்.
‘உலகைச் சுவையுங்கள் அதன் பன்முகத்தன்மையைப் போற்றுங்கள்’ (Taste the World, Cherish The Diversity), ‘சர்வதேச தினை ஆண்டு’ (International Year of Millets) என்ற தலைப்பினை மையமாகக் கொண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகள் இதில் இடம்பெறவுள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல செஃப்கள் இந்த உணவுத் திருவிழாவில் பங்குபெற்று தங்கள் நாட்டின் மூலப் பொருட்களைக் கொண்டு உணவுகளைத் தயார் செய்யவுள்ளனர்.
இந்த உணவுத் திருவிழா வரும் பிப்ரவரி 11, 12 ஆகிய இரு தினங்கள் டெல்லி டல்கடோரா உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இதற்காக ஜி20-ல் இடம்பெற்றுள்ள நாடுகள் மட்டுமில்லாமல் மொத்தம் 29 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். அதுமட்டுமின்றி இந்த உணவுகளை சுவைத்துப் பார்க்கும் வாய்ப்பும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி பல்வேறு நாட்டின் செஃப்கள் தயாரிக்கும் உணவுகள் குறித்த செய்முறை விளக்கம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதற்கும் பிரத்யேகக் கட்டணம் உண்டு.
இதில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு உணவின் விவரங்களும் வரலாறுகளும் புகைப்படத்துடன் கூடிய விளக்கத்துடன் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி டெல்லி மாநகராட்சி கவுன்சில், “இந்த உணவுத் திருவிழாவின் முக்கிய நோக்கம், ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் மற்ற விருந்தினர் நாடுகளின் உணவு வகைகளைப் பொதுமக்கள் ரசித்து சுவைத்துப் பார்க்க வேண்டும் என்பதுதான்.
இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்க அனைத்து ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் விருந்தினர் நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறது.
ராஜ்