பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 மாநாட்டில் இளைஞர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பு தற்போது இந்தோனேசியாவின் வசம் உள்ளது. டிசம்பர் 1 முதல் இந்தியா ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் தனது சமீபத்திய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் “தெலங்கானாவின் ராஜன்னா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த நெசவாளியான எல்தீ ஹரிபிரசாத் காரு. இவர் ஜி-20 மாநாட்டிற்கான சின்னத்தைத் தனது கைகளாலேயே நெய்து எனக்கு அனுப்பியிருந்தார்.
அடுத்த ஆண்டு ஜி-20 உச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டிலே அதை அரங்கேற்றுவது என்பது நமக்கு மிகவும் பெருமிதம் வாய்ந்த ஒன்று. தேசத்தின் இந்தச் சாதனை தொடர்பான மகிழ்ச்சியில் ஜி-20க்கான இந்தச் சின்னத்தைத் தனது கரங்களாலேயே தயார் செய்திருக்கிறார்.
சில நாட்கள் முன்பாக ஜி-20ற்கான சின்னம், பாரதத்தின் தலைமை ஆகியவை தொடர்பான இணையத்தளத்தைத் தொடங்கி வைக்கும் பேறு எனக்குக் கிடைத்தது. பொதுப் போட்டி வாயிலாக இந்தச் சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஹரிபிரசாத் காரு அனுப்பிய பரிசு எனக்குக் கிடைத்த போது, என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. தெலங்கானாவின் ஏதோ ஒரு மாவட்டத்தில் இருக்கும் ஒரு நபர், ஜி-20 உச்சி மாநாட்டோடு இந்த அளவுக்கு தொடர்பு கொண்டிருப்பதைப் பார்க்கும் போது என் மனது இனித்தது.
இன்று, இத்தனை பெரிய மாநாட்டிற்குத் தலைமையேற்று நம் நாட்டில் அதை நடத்துவது என்பதை நினைக்கும்போது, தங்கள் நெஞ்சங்கள் பெருமிதத்தால் நிமிர்கின்றன என்று ஹரிபிரசாத் காருவைப் போன்ற பலர் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
புனேயில் வசிக்கும் சுப்பா ராவ் சில்லாரா, கொல்கத்தாவைச் சேர்ந்த துஷார் ஜக்மோஹன் அனுப்பியிருக்கும் செய்திகளை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் ஜி-20 மாநாடு தொடர்பான பாரதத்தின் செயலூக்கம் மிக்க முயற்சிகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.
ஜி-20 மாநாட்டில் பங்கெடுக்கும் நாடுகளின் மக்கட்தொகை உலக மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பங்கு, உலக வர்த்தகத்தில் நான்கில் மூன்று பங்கு, உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதம் உடையவை.
நீங்களே கற்பனை செய்து பாருங்கள் – பாரதம் இப்போதிலிருந்து 3 நாட்கள் கழித்து, அதாவது டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி, இத்தனை பெரிய நாடுகள் குழுவிற்கு, இத்தனை வல்லமை வாய்ந்த குழுவிற்குத் தலைமை தாங்க இருக்கிறது.
பாரதத்திற்கும், பாரதவாசிகள் ஒவ்வொருவருக்கும் இது எத்தனை பெரிய வாய்ப்பு. இது மேலும் ஏன் விசேஷமானது என்றால், இந்தப் பொறுப்பு, பாரத நாட்டு சுதந்திரத்தின் அமுதகாலத்தில் கிடைத்திருப்பது தான்.
ஜி-20இன் தலைமை நமக்கெல்லாம் ஒரு பெரிய சந்தர்ப்பமாக அமைந்திருக்கிறது. நாம் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி, உலக நன்மை மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.
அது உலக நன்மையாகட்டும் அல்லது ஒற்றுமையாகட்டும், சுற்றுச்சூழல் தொடர்பான புரிந்துணர்வாகட்டும் அல்லது நீடித்த வளர்ச்சியாகட்டும், பாரதத்திடம் இவற்றோடு தொடர்புடைய அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு இருக்கிறது.
ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்று கொடுக்கப்பட்டிருக்கும் கருப்பொருளிலிருந்து, வசுதைவ குடும்பகம் என்பதன் மீதான நம்முடைய அர்ப்பணிப்பு வெளிப்படுகிறது.
நாம் எப்போதுமே கூறிவந்திருப்பது என்னவென்றால், அனைவரும் நன்றாக இருக்கட்டும், அனைவருக்கும் அமைதி கிடைக்கட்டும், அனைவரும் முழுமையடையட்டும், அனைவருக்கும் நலன்கள் பயக்கட்டும்.
இனிவரும் நாட்களில், தேசத்தின் பல்வேறு பாகங்களில், ஜி-20 மாநாடு தொடர்பான பல நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட இருக்கின்றன. இதன்படி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மக்கள் உங்கள் மாநிலங்களுக்கு வரும் சந்தர்ப்பம் ஏற்படும்.
நீங்கள் உங்கள் பகுதியின் கலாச்சாரத்தின் பல்வகையான, தனித்துவமான வண்ணங்களை உலகின் பார்வைக்கு எடுத்துக் காட்டுவீர்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதே வேளையில், ஜி-20 மாநாட்டிற்கு வருவோர், இன்று என்னவோ ஒரு பிரதிநிதியாக வரலாம் ஆனால், எதிர்காலத்தில் அவரே ஒரு சுற்றுலாப் பயணியாகவும் வரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களிடம் நான் மேலும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். குறிப்பாக என்னுடைய இளைய நண்பர்களிடத்தில். அது என்னவென்றால், ஹரிபிரசாத் காருவைப் போலவே நீங்களும், ஏதோ ஒரு வகையிலே ஜி-20 மாநாட்டோடு கண்டிப்பாக உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.
துணியில் ஜி-20யின் பாரத நாட்டுச் சின்னத்தை மிகவும் நேர்த்தியாக, அழகாக உருவாக்கலாம், அச்சிடலாம். உங்கள் இடங்களில் ஜி-20யோடு தொடர்புடைய விவாதங்கள், உரைகள், போட்டிகள் போன்றவற்றை அரங்கேற்றும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுங்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்.
நீங்கள் G20.in என்ற இணையத்தளத்தில் நுழைந்தால், உங்கள் விருப்பத்திற்கேற்ப அங்கே பல விஷயங்கள் கிடைக்கும்” என்று பேசியுள்ளார்.
மோனிஷா