6 பேர் கடத்தி கொலை முதல் என்.ஐ.ஏ விசாரணை வரை … என்ன நடக்கிறது மணிப்பூரில்?
மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கும் நிலையில் முக்கிய வழக்குகள் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது மணிப்பூர் மாநிலம். இயற்கை அழகு, கலாச்சார பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் என கண்ணுக்கு குளிர்ச்சியான மணிப்பூர் மாநிலம் இரண்டு ஆண்டு காலமாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
2023 மார்ச் மாதம் மணிப்பூர் நீதிமன்றம் மெய்தி சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதற்கான பரிந்துரையை மாநில அரசுக்கு வழங்கியது.
அப்போது குகி – மெய்தி சமூகத்திற்கிடையே வெடித்த போராட்டம் வன்முறையாக மாறி, இன்னும் தொடர்கிறது.
2023ல் மணிப்பூரில் நடந்த வன்முறையால் சுமார் 240 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர்.
60,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீட்டை விட்டு இடம் பெயர்ந்தனர். சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக முகாம்களில் தங்கியிருக்கின்றனர். 11,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தசூழலில் கடந்த சில தினங்களாக சற்று அமைதி திரும்பிய நிலையில் மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது.
என்ன நடந்தது?
கடந்த நவம்பர் 11ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குகி சமூகத்தைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மெய்தி சமூகத்தைச் சேர்ந்த 6 பேர் குகி தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
இவர்களில் 3 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள். இதில் ஒரு குழந்தைக்கு வயது 8 மாதம் தான்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் உள்ள பராக் ஆற்றில் கொல்லப்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் மிதந்தன. லக்கிபூரில் உள்ள ஆற்றில் நேற்று (நவம்பர் 17) மற்றொரு குழந்தை மற்றும் இரண்டு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
இவர்கள் ஜிரிபாம் மாவட்டத்தைச் சேர்ந்த லைஷாராம் ஹெரோஜித் என்ற கடைநிலை அரசு ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
தன்னுடைய குடும்பத்தினர் கடத்தப்பட்டது குறித்து லைஷாராம் ஹெரோஜித் கூறுகையில், “என்னுடைய மனைவி, குழந்தைகள், மனைவியின் சகோதரி, மாமியார் ஆகியோரை கடத்திச் சென்றுவிட்டனர். என் மனைவியை கடத்திய பிறகு அவரிடம் இருந்து எனக்கு போன் வந்தது. ஆயுதமேந்திய குழு கடத்திவிட்டதாக கூறினார். பின்னர் அவருடைய கால் கட் ஆகிவிட்டது. திரும்ப அழைத்தால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அப்பாவிகள். என்னுடைய சின்ன குழந்தைக்கு இன்னும் பேசக் கூட வரவில்லை. தயவு செய்து அவர்களை விட்டுவிடுங்கள்” என்று லைஷாராம் கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் அவர்கள் கொல்லப்பட்டது மணிப்பூர் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மெய்தி இன மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் வீடு தாக்குதல்!
இம்பாலின் ஹீங்காங்கில் உள்ள முதல்வர் பைரன் சிங்கின் இல்லத்தை முற்றுகையிட்டு தீ வைக்க முயன்றனர். ஆனால் பாதுகாப்புப் படையினர் காவலுக்கு இருந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைத்து அனுப்பினர்.
எனினும் சுகாதாரத் துறை அமைச்சர் சபம் ரஞ்சன் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் வீடு மற்றும் 6 எம்.எல்.ஏ.க்கள் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தாக்கியுள்ளனர்.
குறிப்பாக எம்.எல்.ஏவும், முதலமைச்சரின் மருமகனுமான ஆர்.கே. இமோ சிங்கின் கார் உள்பட சொத்துகளுக்கு தீ வைத்துக் கொளுத்தினர். சிஆர்பிஎஃப் படையினரின் முகாம், காங்கிரஸ் மற்றும் பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (நவம்பர் 18) பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் பைரன் சிங் மற்றும் ஜிரிபாம் எம்எல்ஏ அச்சாப் உதின் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதாக மணிப்பூர் செய்தி ஊடகமான சாங்காய் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
இப்படி வன்முறை வெடித்த நிலையில் மணிப்பூர் அரசு இம்பால் பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தௌபல் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
மணிப்பூரில் நிலைமை மோசமடைவதால், தலைநகர் இம்பால் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் பாஜக கூட்டணியில் இருந்து தேசிய மக்கள் கட்சி (என்பிபி) விலகியுள்ளது. மணிப்பூர் சட்டப்பேரவையில் மொத்தம் 60 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 7 எம்.எல்.ஏ.க்கள் என்பிபிக்கு உள்ளனர். மணிப்பூர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை. பாஜகவுக்கு 32 எம்எல்ஏக்கள் இருப்பதால் பாஜக அரசுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
ஆனால், மணிப்பூர் மாநிலத்தில் 2 ஆண்டுகளாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் முதல்வர் பைரன் சிங் உட்பட அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று 13 சிவில் அமைப்புகள் கெடு விதித்துள்ளதால் பரபரப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது.
அமித்ஷா அடுத்தடுத்து ஆலோசனை
இதற்கிடையே மணிப்பூர் நிலவரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி சென்று ஆலோசனை நடத்தினார். இரண்டாவது நாளாக இன்றும் சுமார் 12 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உள்துறை அமைச்சகம் அனைத்து பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தியுள்ளது. கூடுதலாக 50 பாதுகாப்பு படைகளை அனுப்பவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தேசிய புலனாய்வு முகமை மூன்று முக்கிய வழக்குகளை இன்று கையில் எடுத்துள்ளது.
ஆயுதம் ஏந்திய குழுவினரால் பெண்கள், குழந்தைகள் என 6 பேர் கொல்லப்பட்ட வழக்கு மணிப்பூர் போலீசிடமிருந்து என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜிரிபாமில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் மீது ஆயுதமேந்திய குழு தாக்கிய வழக்கு, போரோபெக்ரா பகுதியில் உள்ள வீடுகள் எரிப்பு மற்றும் பொதுமக்களை கொன்ற வழக்கு ஆகியவற்றை கையிலெடுத்து என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது.
இந்தசூழலில் மத்தியிலும் பாஜக, மணிப்பூரிலும் பாஜக ஆள்கிறது. அப்படி இருக்கும் போது மணிப்பூருக்கு செல்ல பிரதமர் மோடி ஏன் மறுக்கிறார் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இயற்கை வளமிக்க மாநிலமான மணிப்பூரையும், அம்மாநில மக்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணிப்பூரில் நடக்கும் சம்பவங்கள், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட தேர்தலை எதிர்கொள்ளும் இந்த சமயத்தில் பாஜக அரசுக்கு சவால்களாக உள்ளன.
அதேநேரம் பாஜக அரசு என்ன செய்யப்போகிறது என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
6 பேர் கடத்தி கொலை முதல் என்.ஐ.ஏ விசாரணை வரை … என்ன நடக்கிறது மணிப்பூரில்?
’கூட்டணி இல்லை’ : தவெக அறிக்கைக்கு அதிமுக தலைவர்கள் ரியாக்சன்!