ராகிங் கொடுமை: மாறுவேடத்தில் சென்ற போலீஸ்..சிக்கிய மாணவர்கள்!

Published On:

| By Jegadeesh

இந்தூர் அரசு மருத்துவக்கல்லூரி ராகிங் கொடுமை விவகாரத்தில், பெண் போலீஸ் ஷாலினி சவுகான் மருத்துவக்கல்லூரி மாணவி போல உள்ளே சென்று குற்றவாளிகளை அடையாளம் காட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியான மகாத்மா காந்தி நினைவு மருத்துவக்கல்லூரியில் ராகிங் நடப்பதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் வாட்சப் எண்ணுக்கு புகார் வந்தது.

இதன் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

ராகிங் நடந்தது பற்றி விரிவாகப் புகாரில் இருந்ததே தவிர, செய்தவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை. எத்தனை பேர் இதில் ஈடுபட்டார்கள் என்றும் தெரியவில்லை.

இதையடுத்து, ஷாலினி சவுகான் கல்லூரிக்கு மாணவி போல அனுப்பிவைக்கப்பட்டார்.

அனைத்து மாணவர்களுடனும் நன்கு பேசிப் பழகி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரின் விவரங்களையும் அவர் திரட்டியுள்ளார்.

அது மட்டுமல்லாமல், ஒரு பெண் போலீஸ் செவிலியர் போலவும், இரண்டு தலைமைக் காவலர்கள் உணவக ஊழியர்கள் போலவும் பணியில் சேர்ந்து, இந்த ராகிங் கொடுமையில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்துள்ளனர்.

போலீசார் மாறுவேடத்தில் கல்லூரிக்குள் நுழைந்தது, ராகிங் நடந்ததா என்பதை உறுதி செய்ததோடு, முக்கியமாக இந்த சம்பவத்தில் தொடர்புடைய 11மாணவர்களையும் அடையாளம் காண உதவியிருக்கிறது.

மூத்த மருத்துவ மாணவர்கள், இளநிலை மாணவர்களை தவறாக நடந்துகொள்வது போல செய்ய வற்புறுத்தி ராகிங் கொடுமை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு கிடைக்கப்பெற்றதும், அவர்கள் அனைவரும் மூன்று மாதங்களுக்கு கல்லூரியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஷாலினி சவுகானை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இவரது தந்தையும் ஒரு காவல் அதிகாரி என்பதும் அவர் 2010ஆம் ஆண்டு உயிரிழந்ததால் அவரைப்போலவே தற்போது ஷாலினி சவுகானும் காவல் துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிரண்பேடியும் லட்சுமி யானையும்!

பிரதமர் மோடியை கொல்லுங்கள் – காங்கிரஸ் பிரமுகர் சர்ச்சை பேச்சு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment