இந்தியாவில் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம் செலுத்த வேண்டியது இருக்கும். 75 ஆண்டு கால இந்திய ரயில்வேயின் வரலாறு இதுதான்.
ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு ரயிலில் மட்டும் எந்த டிக்கெட்டும் எடுக்காமல் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம். அந்த ரயில் எங்கே ஒடுகிறது தெரியுமா?
கடந்த 1948-ஆம் இந்தியாவின் மிக உயரமான அணையான பக்ரா நங்கல் அணை சட்லெஜ் நதியில் கட்ட தொடங்கப்பட்டது. இந்த அணை பஞ்சாப், இமாச்சல் மாநிலங்களின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.
இதன் கட்டுமானப்பணிக்கு ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதாவது, பஞ்சாப்பில் நங்கல் என்ற இடத்தில் இருந்து இமாச்சலிலுள்ள பக்ரா என்ற இடம் வரை ரயில்பாதை அமைக்கப்பட்டது.
13 கி.மீ தொலைவு மட்டுமே இந்த பாதை இருக்கும். முதலில் அணையின் கட்டுமானப் பணிகளுக்காக தொழிலாளர்கள் இந்த ரயிலில் அழைத்து வரப்பட்டனர். ஷிவாலிக் மலை பகுதியில் இருந்து அணையின் கட்டுமானப்பணிகளுக்கு பாறைகள் உடைத்து, கொண்டு வரவும் இந்த ரயில் உதவிக்கரமாக இருந்தது. முதலில் நீராவி இன்ஜின் ரயில் இயக்கப்பட்டது. பின்னர், டீசல் ரயிலுக்கு மாற்றப்பட்டது.
Bhakra Beas Management Board என்ற நிறுவனம்தான் இந்த ரயிலை இயக்குகிறது. இந்திய ரயில்வே இயக்கவில்லை. இங்கு பயணிக்கும் மக்களுக்கு டிக்கெட் கிடையாது. முற்றிலும் இலவசமாகவே பயணிக்கலாம்.
இந்தியாவில் இங்கு மட்டும்தான் முற்றிலும் இலவசமாக ரயில் இயக்கப்படுகிறது. தினசரி 800 பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்துகின்றனர். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் பாதையில் 6 ரயில் நிலையங்களும் உள்ளன.
சட்லெஜ் நதி, ஷிவாலிக் மலை என இயற்கை அழகு மிகுந்த பகுதிகளுக்கு இடையே இந்த ரயில் ஓடுகிறது.
சில சமயங்களில் சுற்றுலாப்பயணிகளும் இயற்கை அழகை ரசிக்க இதில் பயணிப்பது உண்டு. தற்போது, 400 குதிரை திறன் கொண்ட டீசல் இன்ஜின் கொண்டு இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
அமெரிக்காவின் 51வது மாகாணமாகிறதா கனடா? டிரம்ப் சொல்லும் காரணம்!
ரோகித் இல்லாத நேரம் கம்பிர் செய்த காரியம்: அஸ்வின் முடிவுக்கு இதுதான் காரணம்!