போக்குவரத்து விதியை மீறியதாக 17 வயது சிறுவனை போலீசார் சுட்டு கொன்றதை அடுத்து பிரான்சில் 3வது நாளாக கலவரம் வெடித்துள்ளது. இதுவரை 875 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் அருகே நான்டெர்ரே எனும் புறநகர் பகுதி உள்ளது. அங்கு கடந்த ஜூன் 27ஆம் தேதி அல்ஜீரிய மற்றும் மொராக்கோ வம்சாவளியை சேர்ந்த 17 வயதான நஹெல் என்ற சிறுவன் காரில் சென்றுள்ளான்.
அப்போது அவன் போக்குவரத்து விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சிறுவன் நஹெல் மார்பில் குண்டு பாய்ந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வீச்சு… தீ வைப்பு… வெடித்தது கலவரம்!
இனவெறியுடன் சிறுவன் கொல்லப்பட்டதாக கூறி பொதுமக்கள் காவல்துறையினருக்கு எதிரான கல்வீச்சு தாக்குதலில் இறங்கினர். தொடர்ந்து கலவரமாக மாறிய இந்த தாக்குதல் தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.
சிறுவன் கொல்லப்பட்ட நான்டெர்ரே பகுதியைத் தொடர்ந்து, ரெளபைக்ஸ், மார்சிலே மற்றும் நாண்டெஸ் உட்பட பிரான்சின் பல நகரங்களும் கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பாரிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள், காவல் நிலையங்கள், போலீஸ் வாகனங்கள், சாலையோர கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.
அடுத்தாண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக கட்டப்பட்டு வரும் ஒலிம்பிக் கிராமமும் கலவரக்காரர்களால் தீவைக்கப்பட்டதால் கடும் சேதத்தை சந்தித்துள்ளது.
ஆபர்வில்லியர் பணிமனையின் நிறுத்தப்பட்டிருந்த 12 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நிகழும் தீ வைக்கும் சம்பவங்களுடன் நாட்டின் பல நகரங்களில் கலவரக்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களையும் வீசி வருகின்றனர்.
மறுபுறம் போலீசார் தற்காப்புக்கான தடுப்புகளை பயன்படுத்தி தங்களை பாதுகாத்து வருவதோடு, பொதுமக்களை நோக்கி தண்ணீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி வருகின்றனர்.
இந்த வன்முறையில் 100க்கும் அதிகமான போலீசார் உட்பட 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட 875 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலவரம் தீவிரமடைந்து வருவதை அடுத்து பாரீஸ் மற்றும் அதனை சுற்றிய முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான போலீசார், பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் வேண்டுகோள்
இந்நிலையில் தான் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தனது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார். இருப்பினும் கலவரம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
தனது 5 ஆண்டுகால ஆட்சியைத் தொடர்ந்து கடந்தாண்டு இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மக்ரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஏற்கெனவே ஓய்வூதியம் தொடர்பான கலவரம் ஆங்காங்கே நீடித்து வரும் நிலையில், தற்போது அல்ஜீரிய இளைஞர் நஹேலின் மரணம் மேக்ரோன் ஆட்சி மீதான அவநம்பிக்கையை அதிகரித்துள்ளது.
எமெர்ஜென்சி பிரகடனம்?
இதற்கிடையே, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், கலவரக்காரர்களின் வன்முறை ஒருபோதும் மன்னிக்க முடியாதது என்றும், கலவரக்காரர்களை சமாளித்து வரும் காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தை தேவையின்றி காவல்துறையின் இனவெறி என்று பெரிதுபடுத்தி எதிர்கட்சிகள் கலவரத்தை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கலவரத்தால் தீக்காடாகவும், புகைமண்டலமாகவும் பிரான்ஸில் பல நகரங்கள் உருமாறி வரும் நிலையில் அங்கு எமெர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட உள்ளது என்றும் பிரதமர் எலிசபெத் போர்ன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
மணிப்பூரில் தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல்: தலைவர்கள் கண்டனம்!