ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை தயாரிப்பதற்காக பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் 200 மில்லியன் டாலர் செலவில் தொழிற்சாலை அமைக்கவுள்ளது.
மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்து வருகிறது பாக்ஸ்கான். தைவானைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், ஒப்பந்த முறையில் ஆப்பிள் உள்ளிட்ட பிரபல பிராண்டுகளுக்கு மின்னணு பொருட்கள் மற்றும் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.
பாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பாக்ஸ்கான் முதல் முறையாக ’வயர்லெஸ் இயர்போன்களை’ உற்பத்தி செய்யவுள்ளது. இதற்காக இந்தியாவில் 200 மில்லியன் டாலர் செலவில் தொழிற்சாலையை அமைக்க பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஏர்பாட்ஸ் உள்ளிட்ட ஏராளமான மின்னணு பொருட்கள் அதிகளவு சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. சீனாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாகப் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் சீனாவில் இருந்த பாக்ஸ்கான் ஐபோன் தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சீனாவிற்கு வெளியில் முதலீட்டை அதிகரிக்கவும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் பாக்ஸ்கான் முடிவெடுத்துள்ளது.
முன்னதாக, ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதில் பாக்ஸ்கான் அதிகாரிகளிடையே தயக்கம் இருந்ததாகவும், லாப வரம்புகள் குறைவாக இருப்பதால் ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை உற்பத்தி செய்யலாமா? வேண்டாமா? என்று பாக்ஸ்கான் அதிகாரிகள் பல மாதங்களாக விவாதித்ததாகவும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளுக்கான ஆர்டர்களை பெற முடியும் என்பதால் பாக்ஸ்கான் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பரிந்துரை அடிப்படையில் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கவும் பாக்ஸ்கான் திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 மில்லியன் டாலர் செலவில் தெலங்கானாவில் ஜூலை மாதத்திற்குப் பிறகு தொழிற்சாலை கட்டுமானத்தை தொடங்கவும் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஏர்பாட்ஸ் தயாரிப்புகளைத் தொடங்கவும் பாக்ஸ்கான் முடிவெடுத்துள்ளது.
மோனிஷா
ஓபிஎஸ் ஆதரவாளர் வழக்கு: ஈபிஎஸ் பதில்!
ஆவின் பால் தட்டுப்பாடு : முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை!