பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவின் வெளியுறவு கொள்கை குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியதை அடுத்து தெஹ்ரீக் இ-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் ஆட்சி கவிழ்ந்தது.
இதையடுத்து அவர் பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் ஷெப்பாஸ் ஷரீப் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், இன்று (அக்டோபர் 28 ) லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு தனது கட்சி ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கானோருடன் மிகப் பெரும் பேரணியை இம்ரான்கான் தொடங்கினார்.
இந்த பேரணிக்கு ’நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம்’ என பெயரிடப்பட்டுள்ளது.
லிபர்ட்டி சவுக்கில் ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான்கான் இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைப் பாராட்டி பேசியுள்ளார்.
அவர், ”இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கை பாராட்டத்தக்கது. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. கொண்டு வந்த தீர்மானங்கள் மீதான ஒட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறது.
இது இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவு கொள்கையை காட்டுகிறது. இதனை தான் பாகிஸ்தானில் நான் பார்க்க விரும்புகிறேன்.
நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும். யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
நான் என் நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதால் அமைதியாக இருக்கிறேன். முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன்.” என்று இம்ரான்கான் பேசியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கார் வெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ.விடம் வழங்கியதில் தாமதமா?: அமைச்சர் பதில்!