பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்தது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஊழல் மற்றும் ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான்கான் மே 9 ஆம் தேதி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அன்றைய தினம் அவர் நீதிமன்றத்திற்கு வெளியே ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் டாப் தலைவர் மீது இம்ரான்கான் குற்றஞ்சாட்டிய மறுநாளே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தானில் முக்கிய நகரங்களின் தெருக்களில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. மேலும் பல இடங்களில் நடைபெற்று வரும் போராட்டங்கள் கலவரமாக மாறியுள்ளது.
இம்ரான்கானின் ஆதரவாளர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டு, இராணுவ கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது, பொதுச்சொத்துக்களுக்கு தீவைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இம்ரான் கைது செய்யப்பட்டதற்கு எதிராக அவருடைய ஆதரவாளர்கள் தாக்கல் செய்த வழக்கை இன்று (மே 11) விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், இம்ரான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமான செயல் என்று தெரிவித்தது. மேலும் ஒரு மணி நேரத்தில் இம்ரான் கானை உச்சநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் இம்ரான் கானின் சட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் சீரியசாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்படுகிறார். இதை ஒட்டி உச்ச நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கான் ஆஜர்படுத்தப்படும் கோர்ட் நம்பர் 1 இல் வழக்கறிஞர்களும்,பத்திரிகையாளர்களும் திரண்டிருக்கிறார்கள்.
மோனிஷா
உண்மை வெளிவந்துவிடும் என்பதால் அமைச்சரவை மாற்றம்: எடப்பாடி
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்- ஸ்டாலின் சொல்வது என்ன?, செய்வது என்ன?