ஹரியானாவின் முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் (ஐஎன்எல்டி) கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் செளதாலா மாரடைப்பு காரணமாக இன்று (டிசம்பர் 20) காலமானார். அவருக்கு வயது 89.
1935-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி சிர்சா பகுதியில் ஓம் பிரகாஷ் செளதாலா பிறந்தார். 1989 – 2005 காலகட்டத்தில் ஹரியானா மாநில முதல்வராக செளதாலா இருந்தார்.
இந்தநிலையில், 2000-ஆம் ஆண்டு ஹரியானாவில் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில், 3,206 பேரை முறைகேடாக பணியில் அமர்த்தியதாக, செளதாலா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த 2013-ஆம் ஆண்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு பிறகு, 2021-ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுதலையானார்.
வயது முதிர்வு காரணமாக, தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்த செளதாலாவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து குராகிராமில் உள்ள அவரது வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செளதாலா காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, ஹரியானா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Karthi: படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!