ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவராக ஜெய வர்மா சின்ஹாவை நியமித்து அரசானை பிறப்பித்துள்ளது ரயில்வே அமைச்சகம்.
உலகில் உள்ள எல்லாத் துறைகளிகளும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்றாலும் தலைமை நிர்வாகப் பொறுப்புகளில் எத்தனை சதவிகிதப் பெண்கள் இருக்கிறார்கள் என்ற கேள்விகள் பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பு மக்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் 2023, சர்வதேச வணிக அறிக்கையான கிராண்ட் தோர்ன்டன் வணிகங்களில் மூத்த நிர்வாகப் பதவிகளில் இந்தியாவில் 36% பெண்கள் உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை உலகளாவிய எண்ணிக்கையை விட 4% அதிகம்,என்றும் ஆய்வறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனால் இந்தியாவில் அரசுப் பணிகளில் பெண்களின் எண்ணிக்கை மே 2023 புள்ளிவிவரத்தின்படி 26 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
அரசாங்க பதவிகளில் மூத்த நிர்வாகப் பொறுப்புகளில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருந்து வரும் நிலையில் ரயில்வே அமைச்சகம் வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரயில்வே வாரியத்தின் முதல் பெண் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெய வர்மா சின்ஹாவை இந்திய அரசு நியமித்துள்ளது.
ரயில்வே வாரியத்தின் 118 ஆண்டு கால வரலாற்றில் அதன் தலைவராக பொறுப்பேற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜெய சின்ஹா.
நேற்று (செப்டம்பர் 1) முதல் இந்திய ரயில்வே மேலாண்மை சேவைகள் (IRMS), உறுப்பினர் (செயல்பாடுகள் மற்றும் வணிக மேம்பாடு), ரயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவிக்கு ஜெய வர்மா சின்ஹாவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது.
யார் இவர்?
அலகாபாத் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜெய வர்மா சின்ஹா, 1988 இல் இந்திய ரயில்வே போக்குவரத்து சேவையில் (IRTS) தனது பணியைத் தொடங்கியுள்ளார்.
சின்ஹா வடக்கு ரயில்வே, தென் கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு ரயில்வே ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். வங்காளதேசத்தின் உயர் ஆணையத்தில் நான்கு ஆண்டு காலம் ரயில்வே ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
கிழக்கு ரயில்வேயின் சீல்டா பிரிவில் கோட்ட ரயில்வே மேலாளராகவும் பணியாற்றினார். அதுமட்டுமல்லாது கொல்கத்தாவில் இருந்து டாக்கா செல்லும் மைத்ரீ எக்ஸ்பிரஸ் அவர் வங்கதேசத்தில் பணிபுரிந்த காலத்தில் துவக்கப்பட்டது.
இவர் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ரயில்வே வணிக மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். இவரது பணிக்காலம் முடிவடையப்போகும் நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி தனது பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார்.
ஆனால் அவரது பதவிக்காலம் முடியும் அதே நாளில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார் என்பதும் ஆகஸ்ட் 31, 2024 வரை அவரது பதவிக்காலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சண்முக பிரியா