டெல்லியில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆய்வு மைய இயக்குநராக தமிழ் நாட்டை சேர்ந்த பேராசிரியர் என். மணிமேகலை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் 1980 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1984-85 முதல் முழு வீச்சுடன் செயல்பட்டு வரும் நிறுவனம் ’பெண்கள் முன்னேற்றத்திற்கான ஆய்வு மையம்’ (centre for women development studies).
இந்திய அரசின் சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR) நிதி உதவியுடன் நடந்து வரும் தன்னாட்சி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த முப்பது ஆண்டுகளாக பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களை ஆற்றல் படுத்துதல் என்ற நோக்கில் பல குறிப்பிடத்தக்க ஆய்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. பெண்களுக்காக எம்.ஃபில் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளையும் நடத்தி வருகிறது.
நாட்டில் உள்ள பெண்கள் ஆய்வு மையத்தில் முக்கியமானதாக விளங்கும் இந்த மையத்தில் பல புகழ்பெற்ற பெண் கல்வியாளர்கள், அறிஞர்கள் இயக்குநர்களாக இருந்து உள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நிறுவனத்தின் இயக்குநராக தமிழ் நாட்டில் இருந்து முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் பேராசிரியர் என். மணிமேகலை.
இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்ற தொடங்கிய இவர், பின்னர் அங்கு பெண்கள் ஆய்வு மையம் தொடங்கப்பட்ட போது அதன் ஸ்தாபக இயக்குனராக பொறுப்பு ஏற்றார். அன்று முதல் தற்போது புது டெல்லியில் இயக்குனராக பொறுப்பு ஏற்கும் வரை அப்பணியை திறம்பட நிர்வகித்து வந்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெண்ணியம் ஆளுமைத்திறன் மேம்பாடு நோக்கில், எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்டி., படிப்புகள் அறிமுகம் செய்ய மணிமேகலை காரணமாக இருந்தார். அத்துடன் பெண்கள் திறன் மேம்பாட்டுக்கான பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொடங்கவும் காரணமாக இருந்திருக்கிறார்.
மத்திய மாநில அரசுகள் மற்றும் பன்னாட்டு நிதி உதவியுடன் 20 பேரியல் ஆய்வுகள் மற்றும் 30 குறுகிய கால ஆய்வுகள் வழியாக பெண்களுக்கு எதிரான சமூக இடர்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். அவற்றில் பல ஆய்வுகள் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் பயன்படும் வகையில் இருந்துள்ளது.
மாநில அளவிலும், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும், பல கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கு பெற்று, 500க்கும் மேற்பட்ட முறை சிறப்புரையாறியுள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவர் திறனை பறைசாற்றும். அவர் சார்ந்த பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், மகளிர் இயல் சார்ந்த பல துறைகளில் தலைவராக ஒருங்கிணைப்பாளராக இருந்து பல நல்ல வழிகாட்டுதல் வழங்கி உள்ளார்.
திட்டமிடல் மற்றும் கொள்கை வடிவமைப்புக்கு வழிகாட்டி உள்ளார். அவர் தற்போது பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட ஓர் தன்னாட்சி நிறுவனத்தில் இயக்குனர் என்ற வாய்ப்பு மேலும் அவரது திறன்களை வெளிக் கொண்டு வர பெண்கள் முன்னேற்றத்திற்கான பல ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட வாய்ப்பாக அமையும்.
பெரியார் பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!
இந்தியா vs இலங்கை இறுதிப்போட்டி: மழை பெய்தால் என்ன நடக்கும்?