பாலசோர் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கிய ரயில் பாதை வழியாக இன்று (ஜூன் 5) பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.
கடந்த ஜூன் 2 ஆம் தேதி இரவு ஒடிசாவில் ரயில்கள் மோதி நடைபெற்ற கோர விபத்து உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிக்னல் பிரச்சனை காரணமாக கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் லூப் பாதையில் சென்றது.
இதனால் அந்த லூப் பாதையில் ஏற்கனவே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா விரைவு ரயில் தடம்புரண்டிருந்த கோரமண்டல் எகஸ்பிரஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 271 பேர் உயிரிழந்துள்ளார்கள். 800-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காயம் அடைந்தவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
விபத்து நடைபெற்றது முதல் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. 1000-க்கும் அதிகமான தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். போர்கால அடிப்படையில் தீவிரமான மீட்புப் பணிகள் நிறைவு பெற்று ரயில் பாதையை சீரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
விபத்து நடைபெற்ற 51 மணி நேரத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணி நிறைவடைந்த பிறகு, அந்த வழியாக இரவு 10.40 மணிக்கு விசாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து ரூர்கேலா ஸ்டீல் பிளாண்ட் வரை நிலக்கரியை ஏற்றி செல்லும் சரக்கு ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் நேரடியாக பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து பஹானகா ரயில் நிலையம் வழியாக இன்று காலை பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. விபத்து நடந்ததற்கு பிறகு இயக்கப்பட்ட முதல் பயணிகள் ரயில் என்பதால், ரயிலின் வேகம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.
மோனிஷா