பாகிஸ்தான் போலீசில் முதன்முறையாக இந்து… யார் இந்த ராஜேந்திர மேவார்?
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முதல் இந்து கிரிக்கெட் வீரர் அனில் தல்பட் ஆவார். ஓய்வு பெற்ற பிறகு இவர், பாகிஸ்தானை விட்டு வெளியேறி கனடாவில் குடியேறினார்.
அனில் தல்பட்டின் உறவினர் டேனிஷ் கனேரியாவும் பாகிஸ்தானுக்காக நீண்ட நாட்களாக கிரிக்கெட் விளையாடினார். அந்த வகையில், பாகிஸ்தானில் முதன் முதலாக இந்து ஒருவர் உயர் போலீஸ் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அவரின் பெயர் ராஜேந்திர மேவார். இவர், பைசலாபாத்தில் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். பாகிஸ்தானில் இந்துக்கள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர்களாக பதவியில் உள்ளனர். ஆனால், இது போன்ற உயர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள படின் என்ற பகுதியை சேர்ந்த இவர், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி ஏ.எஸ்.பியாக மாறியுள்ளார்.
இது குறித்து பாகிஸ்தான் போலீஸ் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், “பாகிஸ்தான் போலீசில் இந்துக்களும் உயர் பதவிக்கு வர முடியுமென்பதை ராஜேந்திர மேவாரின் நியமனம் காட்டுகிறது. நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களும் பாகிஸ்தான் போலீஸ் துறையில் பணியாற்ற முடியும்” என்கின்றனர்.
பாகிஸ்தானிலுள்ள இந்து கோவில் மேலாண்மை அமைப்பின் உறுப்பினர் கிருஷ்ணா சர்மா கூறுகையில், “ராஜேந்திர மேவாரின் நியமனம் பாகிஸ்தான் வாழ் இந்து மக்களுக்கு பெருமையை கொடுக்கிறது. பாகிஸ்தான் அரசின் அனைத்து பணிகளிலும் அனைத்து தரப்பு மக்களும் இடம் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 2 லட்சம் இந்துக்கள் உள்ளனர். இவர்கள், பெரும்பாலும் சிந்து மாகாணம் மற்றும் பலுசிஸ்தானில் வசிக்கின்றனர். இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக கருதப்படுகின்றனர். பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆவார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
ஆதவ் அர்ஜூனா சஸ்பெண்ட்: திருமா ஆக்ஷன்!
முதல் நாளே இப்படியா? ஷாக் கொடுத்த தங்கம் விலை!