அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனல்ட் டிரம்ப், துளசி கப்பார்ட்டை அந்நாட்டு புலனாய்வுத்துறை தலைவராக நியமித்துள்ளார். இவர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக் கொண்டார்.
43 வயதான துளசி கப்பார்ட், ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகி 2024ஆம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார்.அதோடு, பைடன் அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர். அமெரிக்க புலனாய்வுத்துறையின் தற்போதைய தலைவராக அவ்ரில் ஹேன்ஸ் உள்ள நிலையில் துளசி அந்த பொறுப்புக்கு வந்துள்ளார்.
துளசி கப்பார்ட் அமெரிக்க ராணுவத்தில் பல நிலைகளில் பணியாற்றியவர்.ஈராக் போரிலும் பணியாற்றியவர். 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, அமெரிக்கத் தேசிய உளவுத்துறையின் தலைவராக துளசி பொறுப்பேற்பார்.
அமெரிக்கா, அமெரிக்கர்களின் சுதந்திரத்துக்கு துளசி கப்பார்ட் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் குரல் கொடுத்துள்ளார் என்று அவருக்கு டிரம்ப் புகழாரம் சூட்டியதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புலனாய்வுத்துறைக்கு முதன் முறையாக இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் பதவியேற்றுள்ளார். இவர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றில் பகவத் கீதை மீது சத்தியம் செய்து அமெரிக்கர் ஒருவர் பதவியேற்றது இதுவே முதன்முறை.
துளசியின் தாயார் கப்பார்ட் அமெரிக்கராக இருந்தாலும், இந்து மதத்தின் மீது பற்று கொண்டவர். அதனால், தனது குழந்தைகளுக்கு இந்து மத பெயர்களை சூட்டினார். அந்த வகையில் கப்பார்ட் , தனது மகளுக்கு துளசி என்று பெயர் சூட்டினார். இவருக்கு கிருஷ்ணர்தான் பிடித்த கடவுள். துளசி என்ற பெயரை கொண்டிருப்பதால் பலரும் இவரை இந்திய வம்சாவளி என்று கருதுகின்றனர். இவர், அக்மார்க் அமெரிக்கர்தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
உதயநிதி உடை விவகாரம் : புதிய மனுக்களை விசாரிக்க மறுப்பு!