டெல்லியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ 6இ-2131 விமானத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு செல்வதற்கு இண்டிகோ 6இ-2131 விமானம் நேற்று (அக்டோபர் 28) இரவு 10 மணியளவில் புறப்பட்டது.
ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வலது பக்கம் இருந்த எஞ்சினில் தீப்பொறி ஏற்பட்டது. இதனைக் கண்ட விமானி டெல்லி விமான நிலைய ஓடுபாதையிலேயே விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார்.
அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டதால் விமானத்திலிருந்த 177 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.
விமான நிலைய மீட்பு படையினர் விரைந்து வந்து விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
இது குறித்துப் பேசிய பைலட், ”ஓடுபாதையிலிருந்து 5 முதல் 7 வினாடிகளில் விமானம் புறப்பட்டிருக்கும். திடீரென்று வலதுபுற இறக்கைகளிலிருந்து தீப்பொறிகள் வருவதை நான் கண்டேன்.
சில நொடிகளிலேயே இந்த தீப்பொறி பரவ தொடங்கியது. ஆகையால் உடனடியாக விமானத்தை நிறுத்திவிட்டேன்” என்றார்.
இதுகுறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”டெல்லியிலிருந்து பெங்களூருவுக்குப் புறப்பட்ட விமானம் தொழில்நுட்பக் காரணத்தால் டெல்லியில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம்.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக பெங்களூரு அனுப்பி வைக்கப்பட்டார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மோனிஷா
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
இந்தியாவை பாராட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்!