பள்ளியில் மதவெறி… வீடியோவால் அதிர்ச்சி: உ.பி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

இந்தியா

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் இந்து மாணவர்களிடம் சக இஸ்லாமிய மாணவரை தாக்குமாறு ஆசிரியை கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது இன்று (ஆகஸ்ட் 26) ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வெறுப்பு வாதம் தீவிரமாக பரவி வருகிறது.  மேலும் பல்வேறு மத நம்பிக்கைகள் கொண்ட மக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்கும் வகையில் பல்வேறு விதமான வன்முறை சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் உத்தர பிரதேச பள்ளியில் நடந்துள்ள சம்பவம்  நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி ஏற்படுத்திய வீடியோ!

உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முசாபர் நகர் மாவட்டத்தில் குப்பாபூர் என்ற கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் திருப்தா தியாகி என்பவர் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் அவர் தனது வகுப்பில் பயிலும் இந்து மாணவர்களிடம், சக இஸ்லாமிய மாணவரை அடிக்கச் சொல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

அந்த வீடியோவில், வகுப்பறையில் நின்றுகொண்டிருந்த இஸ்லாமிய மாணவரை, இந்து மாணவர் ஒருவர் அடிக்கும்படி ஆசிரியர் கூறுகிறார். அதனை தொடர்ந்து, முதலில் ஒரு சிறுமி அந்த மாணவரின் கன்னத்தில் அறைந்துள்ளார். தொடர்ந்து ஆசிரியர் பிற மாணவர்களையும் நன்றாக அடிக்கும்படி ஊக்குவிக்கிறார். அவர்களும் அடுத்தடுத்து வந்து அழுதபடி நிற்கும் இஸ்லாமிய மாணவரை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக குழந்தைகள் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கடும் கண்டனங்கள் தெரிவித்து வரும் எதிர்க்கட்சி தலைவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில், “நான் என் குழந்தையை மீண்டும் அந்தப் பள்ளிக்கு அனுப்ப மாட்டேன். பள்ளி கட்டணத்தை நிர்வாகம் திருப்பித் தருவதாக கூறியுள்ளனர். அந்த ஆசிரியர், குழந்தைகளுக்கு இடையே பகையை உருவாக்கியுள்ளார்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி கண்டனம்!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், ”அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனிதமான இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுகின்றனர். இதுபோன்ற மோசமான ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு எதுவும் செய்ய முடியாது.

இதே வெறுப்பை தான் பாஜகவினர் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரப்பி தீக்கிரையாக்கி வருகின்றனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம். அவர்களை வெறுப்புக்கு பழக்காதீர்கள், நாம் அனைவரும் ஒன்றாக இருந்து அவர்களுக்கு அன்பை கற்பிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பாஜக-ஆர்எஸ்எஸ்: வெறுப்பு அரசியலின் விளைவு!

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், “உ.பி.யில் உள்ள ஒரு பள்ளியில் மத பாகுபாட்டின் அடிப்படையில் ஒரு குழந்தையை மற்ற குழந்தைகளால் தாக்க கூறிய ஆசிரியரின் செயல் பாஜக-ஆர்எஸ்எஸ்-ன் வெறுப்பு நிறைந்த அரசியலின் விளைவு தான். இவ்வாறான சம்பவங்கள் நமது உலகப் புகழைக் கெடுக்கின்றன. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர் மதவெறியை சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு ஆளுங்கட்சியினரின் வெறுப்பு சிந்தனையின் விஷம் சமூகத்தில் பரவி உள்ளது.

இது போன்ற சம்பவத்தை இன்னொருவர் செய்வதற்கு துணியும் முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து, தண்டனை வழங்க வேண்டும்” என்று மல்லிகார்ஜுன கூறியுள்ளார்.

உடனடியாக பணிநீக்கம் செய்க!

உத்தரபிரதேச எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்,  ”பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் “வெறுப்பு அரசியலே”  ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை அறையும்படி ஒரு ஆசிரியர் தனது மாணவர்களைக் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.  அந்த ஆசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். இது ஆசிரியர் சமுதாயத்தின் மீது கறை” என்று கூறியுள்ளார்.

கபில் சிபல் கேள்வி!

இந்த சம்பவத்தை ‘வெறுப்பு கலாச்சாரம்’ என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் தனது பதிவில், ”நேஹா பப்ளிக் பள்ளியின் ஆசிரியர் திரிப்தா தியாகி இந்து மாணவர்களை வகுப்பறையில் உள்ள சக முஸ்லீம் மாணவரை அடிக்கச் சொல்கிறார்.

உண்மை என்றால் யோகி பேசுவாரா? மோடி இதை பகிரங்கமாக கண்டிப்பாரா? ஆசிரியர் மீது வழக்கு தொடருமா? அல்லது வெறுப்பு கலாச்சாரம் வளர அனுமதிக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்.எஃப்.ஐ பிரச்சாரம்!

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மாணவர் சங்கம், “வரும் ஆகஸ்ட் 28 முதல் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி வரை ஒரு வார கால நாடு தழுவிய வெறுப்புவாதத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக  உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுவரை எதுவும் கூறவில்லை. இதுதொடர்பாக பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஹரிச்சந்திர ஸ்ரீவஸ்தவா, முசாபர் நகர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கேவலமான அரசியல் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது ஒரு ’சிறிய பிரச்சனை’

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து ஆசிரியை திரிப்தி தியாகி ஏ.என்.ஐ ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்,  “நான் ஒரு மாற்றுத்திறனாளி ஆசிரியை. பதற்றத்தை உருவாக்கும் வகையில் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவனை சக வகுப்பு மாணவர்கள் அறைந்தது தவறு தான். அதே வேளையில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவனை தன்னால் எழுந்து நின்று தண்டிக்க முடியாததால் மற்ற மாணவர்களை செய்ய கூறினேன். இது ஒரு ’சிறிய பிரச்சனை’ தான்”  என்று கூலாக பதில் கூறியுள்ளார்.

ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!

இதனையடுத்து மாணவர்களிடையே மதவெறியை தூண்டிவிட்டதாக பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மாணவரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் திரிப்தி தியாகி மீது முசாபர்நகர் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர் மீது 153A, 295A, 298, 323, 504 மற்றும் 506 அகிய ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் ஆட்சியில் அமரும் பாஜக: கருத்துக்கணிப்பு முழு விபரம்!

”உங்கள் பொன்னான வாக்குகளை…”: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழும் தமிழர்களும்!

 

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *