லண்டனில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானத்தில் புகைப்பிடித்ததாக பயணி ஒருவர் மீது மும்பை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
லண்டனில் இருந்து மார்ச் 11ஆம் தேதி ஏஐ 130ஏர் இந்தியா விமானம் மும்பைக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் இருந்த ராமகாந்த்(37) என்ற பயணி ஒருவர் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்துள்ளார்.
இதைக் கண்டறிந்த ஏர் இந்தியா ஊழியர்கள் அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தாமல் புகைப்பிடிப்பதை தொடர்ந்துள்ளார்.
இதனால் ஏர் இந்தியா ஊழியர்கள் அவரை தொடர்ந்து எச்சரித்துள்ளனர்.
ஆனால் அந்த பயணி ஊழியர்களிடமும் சக பயணிகளிடமும் ஆக்ரோஷமான மற்றும் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதனால் ஏர் இந்தியா அந்த பயணி குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு(டிஜிசிஏ) புகார் அளித்துள்ளது.
அவர், ”பலமுறை எச்சரித்தாலும், அவர் கட்டுக்கடங்காத மற்றும் ஆக்ரோஷமான முறையில் நடந்து கொண்டார்” என்று ஏர் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.
தொடர்ந்து விமானம் மும்பைக்கு வந்தவுடன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அந்த பயணி ஒப்படைக்கப்பட்டார். சம்பவம் குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் நடந்து வரும் விசாரணைகளுக்கு நாங்கள் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை சமரசம் செய்யும் எந்த ஒரு நடத்தைக்கும் ஏர் இந்தியா பூஜ்ஜிய சதவீத சகிப்புத்தன்மை கொள்கையைப் பின்பற்றுகிறது” என்று தெரிவித்துள்ளது.
லண்டன் – மும்பை ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்ததாகவும் மற்ற பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் அமெரிக்க குடிமகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை சாஹர் காவல்துறை இன்று(மார்ச் 12) தெரிவித்துள்ளது.
மும்பை காவல் துறையின் தகவல்படி, ஐபிசி பிரிவு336 மற்றும் விமான சட்டம்1937, 22 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோனிஷா
பிரதமரை பார்க்க சிறுவனின் சட்டையை கழற்றிய அதிகாரிகள்
”கனவு காணும் காங்கிரஸ்”: கிண்டல் செய்த மோடி