கேரளா குண்டுவெடிப்பு தொடர்பாக சமூக வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக மத்திய அமைச்சர் மீது இன்று (அக்டோபர் 31) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சி அருகே களமச்சேரியில் கடந்த 29ஆம் தேதி நடந்த கிறிஸ்தவ மதக்குழு பிரார்த்தனை கூட்டத்தின் போது வெடிகுண்டு வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் கேரள போலீசார் தீவிரமாக இறங்கினர்.
இதற்கிடையே தாக்குதல் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அதே சபையில் இருக்கும் டொமினிக் மார்ட்டின் என்ற நபர், குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்று போலீசாரிடம் சரணடைந்தார்.
குறிப்பிட்ட மதக்குழுவில் தான் 16 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளேன் என்றும், அவர்களது போதனைகள் தேசிய நலனுக்கு எதிராக இருந்ததால் குண்டு வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தார்.
எனினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் கேரளா போலீசார், மார்ட்டின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் என்.ஐ.ஏ மற்றும் என்.எஸ்.ஜி அதிகாரிகளும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பினராயி மீது மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!
இந்த நிலையில் கேரளா குண்டுவெடிப்பு குறித்த தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “ஊழல் குற்றச்சாட்டுகளால் முற்றுகையிடப்பட்ட ஒரு மதிப்பிழந்த முதல்வர் பினராயி விஜயன் அழுக்கான வெட்கமற்ற அரசியலை செய்து வருகிறார்.
டெல்லியில் அமர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அவர், கேரளாவில் பயங்கரவாத ஹமாஸின் ஜிஹாத் அமைப்புடன் சேர்ந்து அப்பாவி கிறிஸ்தவர்கள் மீது குண்டுவெடிப்பை நிகழ்த்தி வருகிறார்” என்று குற்றஞ்சாட்டினார்.
மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் முயற்சி!
இதற்கு செய்தியாளர்களிடம் பதிலளித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “விஷம் உள்ளவர்கள் தங்கள் விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருப்பார்கள். இஸ்ரேலுக்கு எதிராக சமாதான அரசியலை நடத்துவதாகவும், போராட்டம் நடத்துவதாகவும் மத்திய அமைச்சர் ராஜீவ் என்னைக் குற்றம் சாட்டியுள்ளார்.
பொறுப்புள்ள அமைச்சராக, இந்த சம்பவத்தை விசாரிக்கும் புலனாய்வு அமைப்புகளுக்கு அவர் குறைந்தபட்ச மரியாதை காட்டியிருக்க வேண்டும். இன்னும் ஆரம்பகட்ட விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவது ஆபத்தானது” என்று கூறினார்.
மேலும், “கேரளாவின் மதச்சார்பற்ற அங்கீகாரத்தை சிதைக்கும் முயற்சியில் கொடிய விஷத்தையும் கக்குகிறார். அவரும் அவரது நண்பர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து, மாநிலத்தின் மதச்சார்பற்ற கட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்” என்று குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.
அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
அதனைத்தொடர்ந்து நேற்று குண்டு வெடிப்பு நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேரளா அரசு மற்றும் முதல்வர் பினராயி விஜயனை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில், கேரளாவில் மக்களிடையே மதவெறியை தூண்டியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள காவல்துறையின் சைபர் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
அவர் மீது 153 (a) (மதம், இனம், பிறந்த இடம், இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் பிரிவு 120 (o) (பொது ஒழுங்கை சீர்குலைத்தல் மற்றும் மீறுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா