கேரள மாநிலம் குருவாயூர் – கொடுங்கநல்லூர் மார்க்கத்தில் ராமபிரியா என்ற பெயரில் தனியார் பஸ் ஓடுகிறது. இந்த பேருந்து அந்த பகுதி மக்களிடத்தில் ரொம்பவே பாப்புலர். ஏனென்றால், இந்த பேருந்தில் தந்தை டிரைவராகவும் மகள் கண்டக்டராகவும் பணியாற்றி வருகின்றனர். அந்த தந்தையின் பெயர் ஷைன். மகளின் பெயர் ஆனந்தலட்சுமி.
முதலில் ஷைன் 6 பேருந்துகளை வைத்து தொழில் செய்து கொண்டிருந்தார். கொரோனா காலத்தில் பெரும் நஷ்டத்தை சந்திக்கவே, தற்போது ராமபிரியா என்ற ஒரே ஒரு பேருந்து மட்டுமே அவரிடத்தில் உள்ளது. இந்த பேருந்துதான் இப்போது ஷைன் குடும்பத்தின் வாழ்வாதாரம்.
இந்தநிலையில், கொரோனாவுக்கு பிறகு, ராமபிரியா பேருந்தில் மகள் ஆனந்த லட்சுமியே கண்டக்டராக பணியாற்ற தொடங்கி விட்டார். எம்.காம் படித்துள்ள இவர், கண்டக்டருக்கான லைசென்சும் எடுத்துள்ளார்.
தினமும் காலையில் 5.30 மணிக்கு தந்தையும் மகளும் பஸ்சை எடுக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு திரும்புகின்றனர். தினமும் 14 மணி நேரம் உழைக்கின்றனர்.
ஆனந்த லட்சுமியின் தாயார் தன்யா கவுன்சிலராக இருக்கிறார். தந்தை, மகளின் கடும் உழைப்பை கண்ட திருச்சூர் தொகுதி எம்.பியும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி இருவரையும் வீட்டுக்கு வரவழைத்து பாராட்டினார் என்பது கூடுதல் தகவல்.