மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், விவசாயிகள் இன்று (பிப்ரவரி 21) மீண்டும் டெல்லி நோக்கி தங்களது பேரணியைத் துவங்கியுள்ளனர். Farmers resumes Delhi Chalo March
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 13 முதல் டெல்லியில் போராட்டம் நடத்தப்போவதாக சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் அறிவித்தன.
அதன்படி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டிராக்டரில் டெல்லி நோக்கி விவசாயிகள் படையெடுத்தனர்.
அவர்களை டெல்லிக்குள் நுழைய விடாமல் சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைப் பகுதிகளில் முள்வேலி, தடுப்புகள் அமைத்து போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடுத்தனர்.
இந்தநிலையில், கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், அர்ஜூண் முண்டா, நித்யானந்த் ராய் ஆகியோருடன் விவசாய அமைப்புகள் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது, எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சோளம் மற்றும் பருத்தி ஆகிய விளைபொருட்களை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்யும் என்று அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்தனர். இதனையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
இந்தநிலையில், மத்திய அரசின் உத்தரவாதம் விவசாயிகளுக்கு சாதகமானதாக இல்லை என்று கூறி விவசாயிகள் இன்று முதல் டெல்லி நோக்கி தங்களது பேரணியை மீண்டும் துவங்கியுள்ளனர்.
விவசாயிகள் பேரணியை தொடர்ந்து டெல்லியில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா விவசாய தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறும்போது, “குழப்பத்தை ஏற்படுத்துவது எங்களின் நோக்கம் அல்ல. நவம்பர் 7-ம் தேதி முதல் டெல்லிக்கு பேரணி வருவதற்கான திட்டத்தை வகுத்து வருகிறோம்.
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்று அரசாங்கம் கூறினால், எங்களைப் புறக்கணிக்க முயல்கிறார்கள் என்று தான் அர்த்தம்.
எங்களைத் தடுக்க இவ்வளவு பெரிய தடுப்புகள் அமைப்பது சரியல்ல. டெல்லிக்குள் அமைதியாக நுழையவே நாங்கள் விரும்புகிறோம்.
தடைகளை அகற்றி எங்களை உள்ளே வர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால், நாங்களும் ஒத்துழைப்பு கொடுப்போம்.
இந்த சூழ்நிலையை நாங்கள் பொறுமையாக கையாள்வோம். இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சந்தை மதிப்பு 365 பில்லியன் டாலரை கடந்த டாட்டா குழுமம்!
நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக இன்று விருப்ப மனு விநியோகம்!
Farmers resumes Delhi Chalo March