Farmers hurl onions at Ajit Pawar's convoy in Nasik

துணை முதல்வர்  வாகனம் மீது தக்காளி வீசிய விவசாயிகள்: காரணம் என்ன?

அரசியல் இந்தியா

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற வாகனம் மீது விவசாயிகள் தக்காளி மற்றும் வெங்காயத்தை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில் தான் நாட்டிலேயே அதிக அளவு வெங்காயம் விளைகிறது. மகாராஷ்டிராவில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் வெங்காயத்தின் விலை உயர ஆரம்பித்தது. உடனே உள்நாட்டில் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான ஏற்றுமதி வரியை மத்திய அரசு கணிசமாக அதிகரித்தது.

இதற்கு மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெங்காயம் அதிக அளவில் விளையக்கூடிய நாசிக் மாவட்ட காய்கறி மார்க்கெட்களில் வெங்காய ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

13 நாள்களாக நடந்து வந்த போராட்டத்தை கடந்த 3ஆம் தேதிதான் விவசாயிகள் விலக்கிக்கொண்டனர்.

சில மாதங்களுக்கு முன்பு தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது.

 

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாசிக் வந்திருந்தார். நாசிக்கில் உள்ள ஒஜ்ஹர் விமான நிலையத்தில் இருந்து தீண்டோரி நோக்கி அஜித் பவார் சென்று கொண்டிருந்தார்.

வழியில் அவரது வாகனத்தை மறித்த விவசாயிகள் வெங்காயத்தின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கோரி கறுப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.

அதோடு அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர் சகன் புஜ்பால், சுனில் தட்கரே சென்ற வானகங்கள்மீது வெங்காயம் மற்றும் தக்காளியை வீசி தங்களது எதிர்ப்பை காட்டினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர், ”விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கின்றனர். வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி வரியை நீக்க வேண்டும். தக்காளிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் சம்பவ இடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்

கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சப்ஜி

தெரிஞ்சே இவ்வளவுன்னா தெரியாம..? அப்டேட் குமாரு!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *