டெல்லி நோக்கி செல்லும் பேரணியை பிப்ரவரி 29-ஆம் தேதி வரை விவசாய அமைப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நோக்கி செல்லும் பேரணியை சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கின.
விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் எல்லைப் பகுதிகளில் தடுப்புகள் மற்றும் வேலிகள் அமைத்து போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு, தடியடி நடத்தினர். கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி பஞ்சாப் – டெல்லி எல்லைப்பகுதியான கனூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தார். அவரது மறைவை தொடர்ந்து இரண்டு நாட்கள் பிப்ரவரி 24 வரை தங்கள் போராட்டத்தை விவசாயிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
இந்தநிலையில், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மேலும் 5 நாட்களுக்கு, பிப்ரவரி 29-வரை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதன்படி இன்று டெல்லியின் எல்லைப் பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்துள்ளனர். நாளை விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்த கருத்தரங்கம், பிப்ரவரி 26-ல் உலக வர்த்தக அமைப்பு மற்றும் மத்திய அரசின் உருவ பொம்மை எரிப்பது என்று தங்களது போராட்ட வடிவத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.
பின்னர் இரண்டு நாட்கள் விவசாய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து டெல்லி நோக்கி பேரணியை தொடங்க உள்ளதாக விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு: தீர்ப்பு எப்போது?