வேட்டி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுப்பு… மால்-ஐ மூட உத்தரவு!

Published On:

| By Kavi

வயதான விவசாயி ஒருவர் வேட்டி அணிந்து வந்ததற்காக உள்ளே அனுமதிக்க மறுத்த மால்-ஐ தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரியைச் சேர்ந்த ஃபாகீரப்பா என்ற 70 வயது விவசாயி தனது மகன் நகராஜுடன் படம் பார்க்க பெங்களூர் மகாடி சாலையில் உள்ள ஜிடி மாலுக்கு வந்தார்.

பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து, தலைப்பாகை கட்டியவாறு மாலுக்குள் நுழைந்த ஃபாகீரப்பாவை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த பாதுகாவலர்கள் மறுத்தனர்.

“வேட்டி சட்டை அணிந்து வராதீங்க… உள்ளே போகணும்னா போய் பேண்ட் ஷர்ட் போட்டு வாங்க… அப்பதான் அனுமதிப்போம்” என்று உள்ளே செல்ல விடாமல் தடுத்திருக்கின்றனர்.

இதை எதிர்த்து மகன் நாகராஜ் பாதுகாவலரிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“எங்க அப்பாவுக்கு பேண்ட் அணியும் பழக்கம் இல்லை. படம் பார்க்க டிக்கெட் எடுத்து வந்துள்ளோம். உள்ளே அனுமதியுங்கள்.. ஒரு படம் பார்க்க பேண்ட் போட வேண்டுமா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதற்கு பாதுகாவலர், எங்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை நாங்கள் செய்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விவசாயி ஃபகீரப்பா கூறுகையில், “நான் எனது 5 பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு படிக்கவைத்தேன். அவர்கள் தற்போது நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். நீண்ட தூரம் பயணம் செய்து மகனை பார்க்க வந்தேன். அவர் என்னை திரைப்படம் பார்க்க மாலுக்கு அழைத்து சென்றார். அங்கு பாதுகாவலர்கள் என்னை அனுமதிக்கவில்லை. சொந்த மாநிலத்தில் இப்படியெல்லாம் நடக்கிறது” என்றார்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ நேற்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து கன்னட அமைப்புகள் மற்றும் விவசாயிகள் மாலுக்கு முன் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “மால் நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மால் நிர்வாகத்தினர் விவசாயிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கோஷம் எழுப்பினர்.

இந்த நிகழ்வு குறித்து சமூக ஆர்வலர் ரூபேஷ் ராஜன்னா கூறுகையில், “மாலுக்குள் ஆண்களும் பெண்களும் ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்கின்றனர். அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் நிர்வாகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் விவசாயி ஒருவர் வேட்டி அணிந்து வரக்கூடாதா? முதல்வர் சித்தராமையா வேட்டிதானே அணிகிறார். அவரை மாலுக்குள் அனுமதிக்க மறுப்பீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

கர்நாடக பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசத் பூணாவாலா, “வேட்டி கட்டியதற்காக விவசாயி அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். வேட்டி கட்டுவது என்பது நமக்கெல்லாம் பெருமை.

மாலுக்குள் வர வேண்டுமென்றால் கோர்ட் சூட் அணிய வேண்டுமா. விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகள் இல்லாமல் மால்களை நடத்திவிடமுடியுமா?” என கேள்வி எழுப்பினார்.

இதுபோன்று மால் நிர்வாகத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மாலின் உரிமையாளர் மற்றும் பாதுகாவலர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 126(2) (தவறான கட்டுப்பாடு) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த விவகாரம் இன்று (ஜூலை 18) நடந்த கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என இரு தரப்புமே மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இதையடுத்து கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பைரதி சுரேஷ், மால் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படி ஜிடி மால்-ஐ 7 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக அழுக்கு சட்டை அணிந்திருப்பதாக ஒரு விவசாயியை பெங்களூரு மெட்ரோ ரயிலில் செல்ல அங்கிருந்த அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் குவிந்த நிலையில் பெங்களூரு மெட்ரோ மன்னிப்பு கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

காதில்- ஒரு பார்வை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel