தவறான தகவல்கள்… விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

இந்தியா

தவறான தகவல்கள் அதிகம் வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விக்கிபீடியா தன்னை ஒரு இலவச ஆன்லைன் கலைக்களஞ்சியம் என விளம்பரப்படுத்துகிறது. அதில் உள்ள பக்கங்களை தன்னார்வலர்கள் உருவாக்கலாம் அல்லது திருத்தலாம்.

விக்கிபீடியாவில் பல்வேறு ஆளுமைகள், சர்வதேச, தேசிய, மாநில அளவிலான முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

ஆனால் இவை அனைத்தும் உண்மையான தகவல்கள் என்று சொல்ல முடியாது. இதில் வழங்கப்படும் தகவல்கள் தவறானதாக இருப்பதாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

சமீபத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் குறித்து விக்கிபீடியாவில் ஒரு தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

அதில், “போலி செய்திகளை எடுத்து இந்நிறுவனம் விநியோகிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான பிரச்சாரக் கருவி” என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து கடந்த செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா, விக்கிப்பீடியாவுக்கு அவமதிப்பு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க விக்கிப்பீடியா விரும்பவில்லை என்றால் அது இந்தியாவில் வேலை செய்ய வேண்டாம் என்றும், அதை ப்ளாக் செய்ய வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் மத்திய அரசு விக்கிப்பீடியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “விக்கிபீடியா வெளியிடும் தகவல்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுகின்றன. அதன் தகவல்கள் ஒருதலை பட்சமாகவும், தவறாகவும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விக்கிப்பீடியாவின் பக்கங்களை உருவாக்குவதிலும், திருத்தம் செய்வதிலும் ஒரு சிறிய குழு ஈடுபட்டு வருவதாக ஒரு பார்வை இருக்கிறது. விக்கிப்பீடியா ஒரு வெளியீட்டு நிறுவனமா? அல்லது இடைத்தரகரா? அந்த நிறுவனத்தை வெளியீட்டாளராக ஏன் கருதக் கூடாது?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக மத்திய தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன்2 பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

கஸ்தூரி பேசுவதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது… ஆ.ராசா பதிலடி!

எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர்களுக்கு 10 ஆண்டுகள் கடந்தும் பதவி உயர்வு இல்லை : காரணம் என்ன?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0