போலியாக சுங்கச்சாவடி அமைத்து அரசை ஏமாற்றி, ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 75 கோடி வரை வசூல் செய்த 5 பேர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. Fake toll plaza in Gujarat
இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்திடும் வாகன ஓட்டிகளிடம் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சொந்தமாக வாகனங்கள் வைத்திருக்கும் பலரும் ஒரு அத்தியாவசியமான தேவை என்றாலும் கூட வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகளை நினைத்து பயப்படும் நிலை தான் தற்போது உள்ளது.
சமீபகாலமாக பாஸ்ட் டாக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் கூட அதிலும் பல்வேறு வழிகளில் மோசடி செய்து வருகின்றனர். தற்போது சுங்கச்சாவடி தொடர்பான அனைத்து விஷயங்களையும் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள பாமன்போர்-கட்ச் தேசிய நெடுஞ்சாலை அருகே தனியார் நிலத்துக்கு சொந்தமான இடத்தில் போலி சுங்கச்சாவடி ஒன்றை அமைத்து 1.5 ஆண்டுகளாக அரசை ஏமாற்றி வந்துள்ளனர்.
இதற்கென தனியாக சாலை அமைத்து நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை பாதை மாற்றி விட்டுள்ளனர்.
அதே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வர்கசியா என்னும் சுங்கச்சாவடி நிலையம் வசூலிக்கும் கட்டணத்தில் பாதியை தான் இவர்கள் வசூல் செய்திருக்கின்றனர்.
இந்த ஒரு காரணத்தால் தான் இவர்கள் நீண்ட நாட்கள் சிக்காமல் இருந்தார்களா? என்பது தெரியவில்லை.
பொதுமக்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள் என பலரிடமும் சுங்கச்சாவடி கட்டணம் வசூலித்தே ஒன்றரை ஆண்டுகளில் சுமார் 75 கோடி வரை சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில் வலுக்கட்டாயமாக வாகனங்களை இந்த வழியாக திருப்பி விடுகின்றனர் என மோர்பி மாவட்ட ஆட்சியர் ஜிடி பாண்டியாவுக்கு புகார் பறந்துள்ளது.
இதையடுத்து அந்த சுங்கச்சாவடியை ஆய்வு செய்திட, அரசு அதிகாரிகளுடன் போலீசாரும் சென்றுள்ளனர். அப்போது நடந்த விசாரணையில் தான் மேற்கண்ட விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
தற்போது குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அமர்ஷி படேல் அவருக்கு உறுதுணையாக இருந்த வன்ராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா மற்றும் யுவராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
அதிரடியாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
ஆளுநர் மாளிகையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!
Fake toll plaza in Gujarat
Comments are closed.