போலி போலீஸ் நிலையம்: 8 மாதத்திற்கு பிறகு கண்டுபிடித்த நிஜ போலீஸ் – சிக்கியது எப்படி?

இந்தியா

பீகாரில் இரு பெண்கள் உட்பட 6 ரவுடிகள் சேர்ந்து போலியான போலீஸ் நிலையத்தை கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் அனுராக் கெஸ்ட் ஹவுஸ் என்ற ஓட்டலில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்த இரு பெண்கள் உள்ளிட்ட 6 ரவுடிகள், அதனை போலீஸ் நிலையமாக மாற்றினர்.

இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், தலைமைக் காவலர், காவலர் என்ற ரேங்க் வாரியாக போலீஸ் உடைகளையும் வாங்கி அவர்கள் அணிந்து கொண்டனர். அதற்கு ஏற்றவாறு நாட்டு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர்.

நடை, உடை, பாவனையில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவர்கள் தங்களை ஒரிஜினல் போலீஸ்காரர்களாகவே மாற்றிக் கொண்டனர்.

fake police station identified in Bihar

கல்லா கட்டிய ரவுடி போலீஸார்!

திடீரென தோன்றிய போலீஸ் நிலையம் குறித்து எந்தவித சந்தேகமும் அடையாத அப்பகுதி மக்கள், நாளடைவில் புகார் கொடுக்க போலீஸ் நிலையம் வர தொடங்கினர்.

இதனை எதிர்ப்பார்த்து காத்திருந்த ரவுடி போலீஸார், மக்களிடம் இருந்து புகார்களை பதிந்து, அதை வைத்து பணம் பறிக்க தொடங்கினர்.

அதோடு அந்த பகுதியில் கடை நடத்தும் வியாபாரிகளிடம் மாமூல் வசூலிக்க தொடங்கினர். இதனால் மாதம் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறு 8 மாதங்களாக போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வந்தனர்

துப்பாக்கியால் கிடைத்த துப்பு!

இதற்கிடையே அப்பகுதியைச் சேர்ந்த ஒரிஜினல் போலீஸிடம் நாட்டு துப்பாக்கியுடன் வலம் வந்த ஒரு ரவுடி போலீஸ் சிக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணை சம்பந்தப்பட்ட நபர்கள் போலி போலீசார் என்பதும், போலி போலீஸ் நிலையத்தை அவர்கள் நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 16ஆம் தேதியன்று போலி காவல் நிலையத்துக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட போலீசார், போலீஸ் உடையில் இருந்த 6 ரவுடிகளையும் அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கிகள், 4 போலீஸ் சீருடைகள், போலி அடையாள அட்டைகள், 500 பிஎம் ஆவாஸ் யோஜனா விண்ணப்பப் படிவங்கள், மாவட்ட நிர்வாகம் வழங்கிய 40 தேர்தல் அட்டைகள், வங்கி காசோலை புத்தகங்கள், 5 செல்போன்கள், போலி முத்திரைகள் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

fake police station identified in Bihar

6 ரவுடிகள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களின் பின்னணி குறித்து விசாரணையில் தெரியவரும் என்று போலீஸ்தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக மக்களிடம் மாமூல் கேட்டு ரவுடிகள் மிரட்டுவர். ஆனால் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ள இந்த ரவுடிகள் போலி போலீஸ் நிலையத்தை கடந்த 8 மாதங்களாக நடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்பகுதியில் உள்ள நிஜ போலீஸ் உயரதிகாரியின் வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் தான் அவர்கள் போலி போலீஸ் நிலையத்தை அமைத்து நடத்தி உள்ளனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

சுதந்திர தின பதக்கம் பெறும் போலீஸ் அதிகாரிகள் செய்த சாதனை என்ன?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *