போலி அரசு அலுவலர், போலி போலீஸ், போலி வக்கீல் பற்றி கேள்விபட்டிருப்போம். ஆனால், போலி நீதிமன்றத்தையே நடத்தி வந்த கில்லாடியை பற்றி கேள்விப்பட்டிருப்போமா? அதுவும் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றத்தை இந்த கில்லாடி நபர் நடத்தி வந்துள்ளார்.
மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்ற நபர்தான் நீதிமன்றம் நியமித்த நடுவராக தன்னைக் காட்டிக்கொண்டுள்ளார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் இவரது போலி நீதிமன்றம் செயல்பட்டு வந்துள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல வழக்குகளில் இவர் தீர்ப்பளித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நிலத் தகராறு வழக்கில் இவர் ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். பின்னாளில் இதே வழக்கு அகமதாபாத் குடிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இந்த ஏமாற்றுக்காரர் பிடிபட்டார். பிடிபட்ட மோரிஸ் சாமுவேலுக்கு 37 வயதாகிறது.
இவர் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி , பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார். காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை உருவாக்கிய இவர், அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் வேலைக்கு வைத்துள்ளார். தன்னை நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று பொதுமக்களிடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி வழக்கு தொடர செய்துள்ளனர். சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தும் அவர்களை ஏமாற்றியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரூ. 250 கோடி சொத்து …3ஆவது திருமணம் செய்த நடிகர் பாலா
திமுக கூட்டணியில் விவாதம் இருக்கலாம், விரிசல் இல்லை: எடப்பாடிக்கு ஸ்டாலின் பதில்!