மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்து நடந்தவுடன் பெரும் அலறல் சத்தமும், தண்டவாளங்களில் உடல்கள் கிடந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்களும், ரயிலில் பயணித்தவர்களும் சொல்கிறார்கள்.
ரயிலில் பயணித்த ஜுடன் கோஷ் கூறும்போது, “திடீரென விபத்து ஏற்பட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம், ரயிலில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் காதை கிழித்தது, உடனடியாக எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. விபத்து நடந்த இடத்தில் ரயில்வே அதிகாரிகளோ, தீயணைப்பு அதிகாரிகளோ இல்லை. அதிகாரிகள் இருந்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருத்திக்கலாம்” என்றார்.
மற்றொரு பயணி, “ஒரே பாதையில் எப்படி இரண்டு ரயில்கள் வந்தது? இந்த விபத்துக்கு ரயில்வே துறையின் அலட்சியம் தான் காரணம். ரயிலில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு ?
விபத்து நடந்தபோது அதிர்ச்சியில் உறைந்து போனேன். அலறல் சத்தமும், இருளும் என்னை சூழ்ந்துவிட்டன. உயிரை காப்பாற்றிக்கொள்ள வேகவேகமாக ரயிலில் இருந்து வெளியேறினோம்” என்றார்.
பி 1 ஏசி கோச்சில் பயணம் செய்தவர், ”நான் பயணித்த பி 1 கோச் பெட்டி தான் விபத்துக்குள்ளானது. என்னால் வெளியே வரமுடியவில்லை. தீயணைப்புத்துறை அதிகாரிகள் தான் என்னை மீட்டனர். தலையில் எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
எஸ் 6 ஸ்லீப்பர் கோச்சில் பயணித்த அகர்தலாவை சேர்ந்த பயணி, “விபத்து நடந்தபோது நான் இருந்த கம்பார்ட்மெண்ட் குலுங்கியது. மனைவி, குழந்தையுடன் எப்படியோ கோச்சில் இருந்து தட்டு தடுமாறி வெளியே வந்துவிட்டோம். மீட்பு பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறகிறது” என்று ஆதங்கத்துடன் கூறுகிறார்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, “திடீரென எழுந்த மக்களின் அலறல் சத்தம் இந்த பகுதி முழுவதும் எதிரொலித்து விண்ணை பிளந்தது. அப்போது தான் விபத்து நடந்தது எங்களுக்கு தெரியும். உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்றபோது இரண்டு சடலங்கள் ரயில்வே டிராக்கில் கிடந்தது.
பார்ப்பதற்கே இந்த சம்பவம் மிகவும் பயங்கரமாக இருந்தது. உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட துவங்கினோம். அதிகாரிகளை தொடர்புகொண்டு தகவல் சொன்னோம். விபத்தில் சிக்கியவர்களுக்கு எந்தவிதமான உதவியையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம், பயணிகள் ரயில் வந்த டிராக்கிலேயே சரக்கு ரயிலும் வந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது” என்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”மகாராஜா பாத்துட்டு என்னை எல்லோரும் திட்டுறாங்க” : சிங்கம் புலி
சென்னை: பெண்ணை கொம்பில் முட்டி இழுத்துச் சென்ற எருமை மாடு!