நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை காரணமாக, இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை
நாட்டில் உள்ள டெல்லி, பஞ்சாப், ஹரியானா, தமிழகம், ஒடிசா போன்ற பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி உட்பட வட மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது.
டெல்லியில் மே 29ஆம் தேதி இதுவரை இல்லாத அளவாக 127 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாடும், மின்வெட்டு பாதிப்பும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பகல் 10 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன.
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை
வெப்ப அலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரப்பிரதேசத்தில் இன்றும், நாளையும், ஹரியானா, சத்தீஸ்கர், டெல்லியில் இன்றும் புழுதிப்புயல் வீசக்கூடும்.
தென்மேற்கு இந்தியாவில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பஞ்சாப், ஹரியானா, சத்தீஸ்கர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் இன்று கடுமையான வெப்ப அலை காணப்படும்.
மேற்கு வங்கம், கொங்கன் மற்றும் கோவாவில் இன்று (ஜூன் 1) வெப்பம் மற்றும் ஈரப்பதமான வானிலை காணப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
74 பேர் உயிரிழப்பு
வெப்ப அலை அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூரில் நேற்று (மே 31) நாடாளுமன்றத் தேர்தல் பணியில் ஈடுபட்ட 23 பாதுகாப்பு படை வீரர்கள் மயக்கமடைந்தனர்.
இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், மீதமுள்ள 13 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 13 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் கடந்த வியாழன் முதல் 42 பேர் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர். பீகாரில் 19 தேர்தல் அதிகாரிகள் வெப்ப அலையால் உயிரிழந்துள்ளனர்.
இப்படி பிகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 74 பேர் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி சோமா சென் பேசியதாவது, “வெப்ப அலையால் கடந்த 24 மணி நேரத்தில் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்க்கண்டில் இன்று முதல் வெப்ப அலை படிப்படியாக குறையும். பஞ்சாப், ஹரியானா, ஒடிசாவில் வெப்ப அலை தொடரும்.
டெல்லியில் வெப்பம் வாட்டி வதைத்தாலும், இன்று அல்லது நாளை புழுதி புயல் அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
வெப்ப அலை – ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்
வெப்ப அலை தொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நேற்று (மே 31) நடைபெற்றது.
இதில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் “பொதுமக்களை அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் தவறிவிட்டனர். இதன் காரணமாக, இந்த மாதத்தில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கிரகத்தை விட்டால் நாம் வசிக்க வேறு கிரகம் நமக்கு இல்லை. தற்போது அதிகரித்து வரும் வெப்ப அலையை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், எதிர்கால சந்ததியினர்மிகவும் பாதிக்கப்படுவார்கள்” என தெரிவித்தது
தொடர்ந்து, “இதுபோன்ற அதிக வெப்ப அலை நிலவும்போது, இதனை தேசிய அவசர நிலையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 17 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் நேற்று (மே 31) 17 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
வேலூர் – 110.48 டிகிரி ஃபாரன்ஹீட்
திருத்தணி – 108.32 டிகிரி ஃபாரன்ஹீட்
மீனம்பாக்கம் (சென்னை) – 106.7 டிகிரி ஃபாரன்ஹீட்
ஈரோடு – 105.44 டிகிரி ஃபாரன்ஹீட்
நுங்கம்பாக்கம் (சென்னை) – 104.36 டிகிரி ஃபாரன்ஹீட்
தஞ்சாவூர் – 104 டிகிரி ஃபாரன்ஹீட்
மதுரை விமான நிலையம் – 103.82 டிகிரி ஃபாரன்ஹீட்
திருச்சி – 103.46 டிகிரி ஃபாரன்ஹீட்
கடலூர் – 103.1 டிகிரி ஃபாரன்ஹீட்
பரமத்தி வேலூர், மதுரை நகரம் – 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்
சேலம் – 101.8 டிகிரி ஃபாரன்ஹீட்
நாகப்பட்டினம் – 101.12 டிகிரி ஃபாரன்ஹீட்
நாமக்கல் – 100.4 டிகிரி ஃபாரன்ஹீட்
பரங்கிப்பேட்டை, திருப்பத்தூர் – 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகிய இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோலி சிறந்த வீரர் தான், ஆனால்…. – கங்குலி சொன்ன குட் ஐடியா!
இறுதிக்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் – 1 மணி நிலவரம்!