பாகிஸ்தானுக்கு உளவு: சிக்கிய வெளியுறவுத் துறை பணியாளர்!

இந்தியா

பாகிஸ்தானைச் சேர்ந்தவருக்கு இந்திய ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஓட்டுநர் நேற்று (நவம்பர் 18) கைது செய்யப்பட்டார்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த ஓட்டுநரை, பாகிஸ்தானுக்கு உளவாளியாகச் செயல்படுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று டெல்லி ஜவகர்லால் நேரு பவனில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ஹனி ட்ராப் எனப்படும் நூதன ஏமாற்று வலையில் விழுந்த வெளியுறவுத்துறை அமைச்சக ஓட்டுநர், பூனம் சர்மா அல்லது பூஜா என்ற போலி பெயரில் செயல்பட்டு வந்த பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரிடம், பணத்திற்காக இந்தியாவின் தகவல் மற்றும் ஆவணங்களைப் பரிமாறிக் கொண்டதாக டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மிகவும் ரகசியமான அதி முக்கியம் வாய்ந்தவை என்றும் கூறப்படுகிறது. கைதானவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் அதே வேலையில், இதுபோன்று வேறு எந்த ஊழியர்களும் சிக்கியிருக்கிறார்களா என்ற கோணத்திலும் உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.

முன்னதாக செப்டம்பர் 7 2022 அன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் பகுதியைச் சேர்ந்த ஜவான் பிரதீப் குமார், இதேபோன்று ஹனி ட்ராப் வலையில் சிக்கினார். ரியாஸ் ஷர்மா என்ற போலி பெயரில் பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ-யை சேர்ந்தவருக்கு இந்தியத் தகவல்களை அனுப்பிய குற்றச்சாட்டில் ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

2021 நவம்பர் மாதம் பிரதீப் அலைபேசிக்கு ரியாவிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இது தவறான அழைப்பு என்று முதலில் துண்டிக்கப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளத் தொடங்கினர். இவ்வாறு இருவரும் பழக, ராணுவ பயிற்சிகளுக்கான கணினி திரை காட்சிகள், ஏவுகணை பிரிவின் பேட்டரி அறை மற்றும் லாக்கர் அறை போன்ற ரகசியத் தகவல்களை ரியாவுக்கு பிரதீப் அனுப்ப தொடங்கினார்.

இதை அடுத்து புலனாய்வு அமைப்பின் பிடியில் பிரதீப் சிக்கியவுடன் ரியா தலைமறைவானார்.

External Affairs Ministry driver arrested for leaking information

கடந்த ஆகஸ்ட் மாதம் பக்சந்த் என்பவர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட பக்சந்த் தனது குடும்பத்தினருடன் 1998 ஆம் ஆண்டு டெல்லிக்கு வந்துள்ளார். அவருக்கு 2016 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 16 2022 அன்று ராஜஸ்தான் காவல் துறையின் புலனாய்வு பிரிவினர், நாராயண் கத்திரிப் சிங் மற்றும் குல்தீப் சிங் செகாவாத் ஆகியோரை பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்டதாகக் கைது செய்தனர்.

இந்திய குடிமக்களின் சிம் கார்டுகள் மற்றும் தொலைபேசி எண்களை வழங்கி அவர்களின் பெயரில் சமூக ஊடக கணக்குகளை உருவாக்கப் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு இவர்கள் உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதுபோன்று ஜூலை 26 2022 அன்று, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சாந்தி மோய் ராணா என்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். அவரும் இதுபோன்று ஹனி டிராப் வலையில் சிக்கி தனது படைப்பிரிவு தொடர்பான ரகசிய தகவல்களையும் ராணுவ பயிற்சியின் வீடியோக்களையும் சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து கொண்டதாக உளவுத்துறை டிஜி உமேஷ் மிஸ்ரா அப்போது தெரிவித்திருந்தார்.

ஜூலை இரண்டு 2022 அன்று பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர், ஹனுமன் கர் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் நடத்தப்பட்ட ஆபரேஷன் ஹிப்ஜாத் என்ற சோதனையில், பாகிஸ்தானுக்கு உளவு கொடுத்ததாக தெரியவந்து நிதின் யாதவ், ராம் சிங், அப்துல் சத்தார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த மே 6 2022 அன்று இந்திய விமானப் படையைச் சேர்ந்த தேவேந்திரர் சர்மா என்பவர் டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை ஆன்லைன் மூலம் சந்தித்த ஒரு பெண்ணிடம் பகிர்ந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழலில் தற்போது பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக பணியாளர் ஒருவரே கைது செய்யப்பட்டது தேசத்தின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

பிரியா

கொட்டும் கலெக்‌ஷன்: பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பொன்னியின் செல்வன்

உலக கோப்பை தோல்வி: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *