டெல்லி சேவைகள் திருத்த மசோதா கடந்த 4 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
டெல்லி அரசின் அதிகாரிகளை நியமிப்பதில் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்தான் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் ஆம் ஆத்மியின் டெல்லி அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்தது.
இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்த டெல்லி அரசு இது தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
அந்த மனுவில், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு வந்தது.
அதன் முடிவில் கடந்த மாதம் 11ம் தேதி, “மக்களின் நலன் கருதி சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறி நீதிபதிகள் அதிகாரிகளின் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மீண்டும் உறுதி செய்தனர்.
இந்நிலையில் தான் இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு அவசர சட்ட மசோதாவை கொண்டு வந்தது. பாஜக பெரும்பான்மை கொண்ட மக்களவையில் இந்த மசோதா எளிதாக நிறைவேறியது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் இதனை தோற்கடிக்கலாம் என்கிற சூழலில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் 9 பேர், தெலுங்கு தேசம் எம்பி ஒருவர், பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்பி 9 பேர் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.
இதனால் பாஜக ஆதரவு எம்பிக்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாநிலங்களவையிலும் டெல்லி சேவைகள் மசோதா எளிதாக நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற விவாதத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, காங்கிரஸ் சார்பில் கே.சி.வேணுகோபால உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில் முதன்முறையாக தனது கன்னி பேச்சாக டெல்லி சேவைகள் திருத்த மசோதா குறித்து பேசினார் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.
அவர், “என்னை பொறுத்த அளவில் இந்த மசோதா சரியானது. முற்றிலும் செல்லுபடியாக கூடியது. மாநில சட்டமன்றம் மாநிலங்களுக்கான சட்டங்களை உருவாக்குகிறது. பாராளுமன்றம் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டங்களை உருவாக்குகிறது.
டெல்லி சேவைகள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது போன்ற மசோதாக்களை இங்கு தாக்கல் செய்ய கூடாது என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனர். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. மத்திய அரசின் அவசரச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான அத்துமீறல் என்று கூற முடியாது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசர சட்டம் செல்லுபடியாகும்.
இந்த மசோதா முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானதுதான். டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களுக்கு சட்டங்களை இயற்றும் உரிமை நாடாளுமன்றத்திற்கு உள்ளது” என்று கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஜவான் ரிலீஸ் கவுண்டவுன் தொடங்கியது!
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத் துறை!