ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டுகள் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை எதிர்த்து அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவரது அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ- இன்சாப் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது.
அதனைத்தொடர்ந்து இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்த போது வெளிநாட்டு தலைவர்கள் உள்ளிட்டோர் பரிசுகளாக வழங்கிய பொருட்களை தோவஷுகானா எனப்படும் அந்நாட்டு கருவூலத்தில் ஒப்படைக்க தவறியதால் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகாத இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. பாகிஸ்தானில் கிரிமினல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட எவரும் நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து லாகூர் வீட்டில் இருந்த இம்ரான் கான் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 5) கைது செய்யப்பட்டார். பின்னர் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு வரலாற்று நகரமான அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவரை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக இம்ரானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ- இன்சாப் கட்சி சட்டக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
‘சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரானை சந்திக்க பஞ்சாப் மாகாண உள்துறை செயலரிடம் முறையாக விண்ணப்பித்தோம். இருப்பினும், அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுதிறது” என அவர்கள் கூறினர்.
இந்த நிலையில், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் உயர் நீதிமன்றங்களில் முறையான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானுக்கு வழக்கறிஞரின் உதவியை பெற அனுமதி வழங்கக் கோரப்பட்டது. இதன்மூலம் சட்ட முறைப்படி, அவரது தண்டனையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கிடைக்கும்.
மேலும், இம்ரான் கானை ‘ஏ-கிளாஸ்’ பிரிவில் சேர்ப்பதற்கு தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர்மட்ட சிறைக் கைதிகளுக்காக வழங்கப்படும் மேம்பட்ட வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அக்கட்சியை வழிநடத்தும் ஷா மஹ்மூத் குரேஷி, “அமைதியான போராட்டம் எங்கள் உரிமை. எந்த அரசு சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது. யாரும் சட்டத்தை கையில் எடுக்க வேண்டாம்” என்று தொண்டர்களை எச்சரித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக அமைதிப் பேரணியில் கவுன்சிலர் மரணம்: முதல்வர் இரங்கல்!
காவிரி நீர் – திமுக அரசுக்கு பொறுப்பில்லை : ஓபிஎஸ்
2014 -2023 : பணமோசடி புகார் முதல் EDக்கு அனுமதி வரை – செந்தில் பாலாஜி வழக்கின் முழு டைம்லைன்!