மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் நேற்று (அக்டோபர்13) இரவு மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணத்திற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அஜித் பவார் ஆதரவு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர் பாபா சித்திக். அக்கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று மாலை, தனது அலுவலகம் அமைந்துள்ள மும்பை பந்திராவில் உள்ள நிர்மல் நகர் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.
பின்னர் அலுவலகத்திற்கு வெளியே வந்த பாபா சித்திக்கை, அங்கு வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இதில் வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்த பாபா சித்திக், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகே இருந்த லீலாவதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அஜித் பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் இருந்த அவரது வருகை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது மிக சக்தி வாய்ந்த இஸ்லாமிய அரசியல் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டார் பாபா சித்திக். சமூக நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை போன்ற பல்வேறு விவகாரங்களில் அவரது நடவடிக்கைகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.
நடைபெற இருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாபா சித்திக் படுகொலை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் அவரது படுகொலைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை!
ஆளும் கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், “பாபா சித்திக் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது தொடர்பாக மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினரிடம் பேசி உள்ளேன். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர்கள் உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
தற்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது குற்றவாளி தலைமறைவாகி இருக்கிறார். மும்பை போலீசார் விரைவில் மூன்றாவது குற்றவாளியை கைது செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
வெளிப்படையான விசாரணை வேண்டும்!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் சோகமான மறைவு வார்த்தைகளால் சொல்ல முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துயரத்தின் இந்த நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விவகாரத்தில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும், தற்போதைய மகாராஷ்டிரா அரசு முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகளை விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பொறுப்புக்கூறல் மிக முக்கியமானது” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
எனது நண்பரை இழந்துவிட்டேன்!
தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் தனது கண்டன அறிக்கையில், “நீண்ட காலமாக சட்டப்பேரவையில் இருந்த என்சிபி தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது, கண்டனத்துக்குரியது, வேதனை அளிக்கிறது.
இந்த சம்பவத்தில் அவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எனது நண்பரை இழந்துவிட்டேன். இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். எனது மனமார்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பதும் கண்டுபிடிக்கப்படும்.
பாபா சித்திக் மறைவால் சிறுபான்மை சகோதரர்களுக்காக போராடி சர்வ மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட ஒரு நல்ல தலைவரை இழந்து விட்டோம். அவரது மறைவு என்சிபிக்கு பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்” என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சஞ்சு – சூர்யா சூறாவளி ஆட்டம்… வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த இந்தியா!
லெபனான் மக்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்: இஸ்ரேல் எச்சரிக்கை!