ஆணாக மாறும் மேற்குவங்க முன்னாள் முதல்வர் மகள்!

Published On:

| By Monisha

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் மகள் சுசேதனா அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாற உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியாவின் மகள், சுசேதனா பட்டாச்சாரியா. 41 வயதாகும் இவர், திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சுசேதனா ஓரின சேர்க்கையாளர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியதை, ஓரின சேர்க்கையாளர்கள் நல ஆர்வலர் சுப்ரவா ராய் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும், கூட்டத்தில் சுசேதனா தன்னை திருநம்பியாக அறிவித்துக்கொண்டதாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை சுசேதன் என்று மாற்றிக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை சுசேதனாவும் உறுதிபடுத்தி இருக்கிறார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்துள்ளேன். எனக்கு 41 வயதாகிவிட்டதால் எனது வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் என்னால் சுயமாக எடுக்க முடியும். அந்த வகையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். தயவுசெய்து இதில் என் பெற்றோரை உள்ளே இழுக்காதீர்கள்.

யார் ஒருவர் தன்னை மனரீதியாக ஆணாக நினைக்கிறாரோ அவர் ஆடவர் ஆவார். நானும் மனரீதியாக ஆடவராகவே என்னை உணர்கிறேன். எனவே உடல் ரீதியாகவும் அவ்வாறே மாற விரும்புகிறேன். அறுவை சிகிச்சைக்கு சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. என் அடையாளம் என் தந்தைக்கு தெரியும். அதனால் எனது முடிவுக்கு ஆதரவாகவே இருக்கிறார். இந்தச் செய்தியை மீடியா பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்று கூறியுள்ளார்.

சுசேதனாவின் இந்த முடிவு, இந்தச் சூழலில் இருக்கும் பலருக்கு அச்சம் விலக்கி, இந்த மாற்றம் குறித்து பேச வைக்கும் என்று ஓரின சேர்க்கையாளர்கள் பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்

ரயிலில் இருந்து வெளியேறிய கரும்புகை… பதறிய பயணிகள்: ரயில்வே விளக்கம்!

கிச்சன் கீர்த்தனா: கம்பு இட்லி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel