மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் தெரிவிக்கும் வகையில் விரிவான விவரத்தை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 16) உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ளன.
இந்தசூழலில் உச்ச நீதிமன்றத்தில் இன்று முக்கியமான வழக்கான 100 சதவிகிதம் விவிபேட் ஒப்புதல் சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்தியாவில் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு செலுத்தும் அலகு, கட்டுப்பாட்டு அலகு, வாக்காளர் சரிபார்க்கக் கூடிய விவிபேடு (ballot unit, control unit, vvpat) ஆகிய அலகுகள் இருக்கும்.
இதில், வாக்காளர் வாக்குச் செலுத்தும் போது வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் காட்டும். இதன்மூலம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
இதன்பிறகு சீலிடப்பட்ட பெட்டியில் அந்த சிலிப் விழுந்துவிடும்.
தற்போதுள்ள நடைமுறைப்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தலா 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் ஒப்புகை சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் தேர்தலில் முறைகேடு நடைபெறாமல் இருக்க 100 சதவிகித விவிபேட் ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் சமூக ஆர்வலர் அருண் குமார் அகர்வால் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் இன்று (ஏப்ரல் 16) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆஜரானார்,
அவரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “2019 ஆம் ஆண்டில் இதே விவகாரத்தை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது. அப்போது ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் – விவிபேடு ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்றிருந்ததை 5 ஆக உயர்த்தப்பட்டது” என தெரிவித்தனர்.
இதற்கு பிரஷாந்த் பூஷன், “ 2019 தேர்தலுக்கு முந்தைய கால நேரத்தை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “நாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும். அல்லது அனைத்து விவிபேடு ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்.
தற்போது ஒப்புகை சீட்டுகள் தானாகவே இயந்திரத்துக்குள் விழுந்துவிடுகிறது. மாறாக அந்த சீட்டை வாக்காளர்களிடம் கொடுத்து அதை வாக்குப்பெட்டியில் போடலாம்.
2017ல் ஈவிஎம் முறை இறுதி வடிவத்துக்கு கொண்டு வந்த போது, அது வெளிப்படையான கண்ணாடி வடிவமைப்பாக இருந்தது. தற்போது இருண்ட ஒளிபுகா கண்ணாடியாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? இல்லையா? என்பதை கூட வாக்காளர்களால் தெரிந்துகொள்ள முடியாது” என்று தெரிவித்த அவர், ஜெர்மனி தேர்தல் முறையை சுட்டிக்காட்டினார்.
ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள் வாக்குச் சீட்டு முறைக்கே மாறிவிட்டனர் என்றார் பிரஷாந்த் பூஷன்.
அப்போது நீதிபதிகள், ஜெர்மனியின் மக்கள் தொகை என்ன என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பிரஷாந்த் பூஷன், “5-6 கோடி இருக்கும்” என்றார்.
இந்தியாவில் தற்போது 97 கோடி வாக்காளர்கள் உள்ளனர் .
இவர்களில் 65 சதவிகிதம் பேர் வாக்களிக்கிறார்கள் என்றாலும் கூட அத்தனை வாக்குகளையும் எப்போது எண்ணி முடிப்பது?. மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்பது சாத்தியமற்றது” என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக நீதிபதி தீபங்கர் தத்தா, “ஜெர்மனியை விட எனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் மக்கள் தொகை அதிகம். ஈவிஎம் போன்ற நடைமுறையை குறைத்து மதிப்பிட முயற்சிக்காதீர்கள் ” என கூறினார்.
தொடர்ந்து வாதாடிய பிரஷாந்த் பூஷன், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ப்ரொகிராமபுள் சிப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஐயோப்பிய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வாக்குச்சீட்டு முறைக்கு மாறிவிட்டனர்” என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், “அதற்குள் செல்ல வேண்டாம்” என கூறினர்.
எனினும் பிரஷாந்த் பூஷன் “இது உண்மையான விஷயம்” என வாதிட்டார்.
அனைத்து ஒப்புகை சீட்டுகளை எண்ண 12 நாட்கள் தேவைப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன், “2019 ஆம் ஆண்டு தேர்தலில் ப்ளூம்பெர்க் குயின்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் உள்ள தரவுகளை மாநிலம் வாரியாக பகுப்பாய்வு செய்தன. இதில் சுமார் 373 தொகுதிகளில் முரண்பாடுகள் இருந்தது தெரியவந்திருக்கிறது.
காஞ்சிபுரம், மதுரை, தர்மபுரி ஆகிய மக்களவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகளுடன் எண்ணப்பட்ட வாக்குகள் பொருந்தி வரவில்லை” என்று வாதம் வைத்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க கூடிய நிறுவனங்களின் இயக்குனர்கள் சிலர் பாஜகவை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் இயந்திரத்தின் நம்பகத்தன்மை பொதுமக்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், “நாங்கள் எல்லாம் 60களைச் சேர்ந்தவர்கள், வாக்குச்சீட்டு முறை இருந்த போது என்னவெல்லாம் நடந்தது என்பதை அறிவோம். நாங்கள் எதையும் மறக்கவில்லை.
மனித தலையீடுகள் தான் இங்கு பிரச்சினை. மனித தலையீடு இல்லாமல் இருந்தால் இயந்திரங்கள் சரியாக இருக்கும், துல்லியமான முடிவுகள் இருக்கும். மனித தலையீடுகள் தான் முறைகேடுகளுக்கு காரணமாக இருக்க முடியும்” என்று குறிப்பிட்டனர்.
மேலும் அவர்கள், “முறைகேடு நடைபெற்றால் என்ன தண்டனை வழங்கப்படும். மின்னணு வாக்கு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் தொழில்நுட்ப நிபுணர்கள் பரிசோதிப்பதற்காக வைத்திருக்க முடியுமா?
வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னும் பின்னும் இவிஎம் இயந்திரத்தை பரிசோதிப்பது கட்டாயமா?
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா உள்ளதா என கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில், “சட்டப்பிரிவு 132 (வாக்குச்சாவடியில் முறைகேடு) மற்றும் 132A (வாக்கெடுப்புக்கான நடைமுறையைக் கடைப்பிடிக்கத் தவறினால் அபராதம்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுபோன்று வேட்பாளர் ஆட்சேபனை தெரிவித்தால் இடையில் வாக்குப்பதிவு இயந்திரம் சோதனை செய்யப்படும். 50 சதவிகித வாக்குசாவடிகளில் சிசிடிவி பொறுத்தப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து வழக்கை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள் அன்றைய தினம், மின்னணு வாக்குப்பதிவு முறையில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளையும் தெரிவிக்கும் வகையில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா