உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்!
உக்ரைனுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த போலந்து விவசாயிகள், நேற்று முன்தினம் உக்ரைனுக்குச் செல்லும் அனைத்து சாலைகளை மறித்து போக்குவரத்தைத் தடை செய்தனர். இதனால் இரு நாடுகளுக்கிடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வு குறித்து பேச போலந்து தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார் .
உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான ராணுவ நடவடிக்கையை தொடங்கி நாளை (பிப்ரவரி 24) இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.
போர் தொடங்கியதில் இருந்தே அண்டை நாடான போலந்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான போலந்து, உக்ரைனில் இருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன், உக்ரைனுக்கு ஆயுதங்களையும் வழங்கியது.
இந்த நிலையில், உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்வதால் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக போலந்து விவசாயிகள் குற்றம்சாட்டி போராடத் தொடங்கியதில் இருந்து பிரச்சினை உருவானது.
இந்த விவகாரம் நாளுக்கு நாள் வலுத்து, பெரிய அளவில் வெடித்துள்ளது. நேற்று முன்தினம் போலந்து விவசாயிகள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர்.
உக்ரைனுக்கு செல்லக்கூடிய அனைத்து சாலைகளையும் மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். அத்துடன் சிலர் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர். இந்த செயல் உக்ரைனின் கோபத்தை தூண்டும் வகையில் அமைந்தது.
இதையடுத்து போலந்து விவசாயிகளின் பிரச்சினை குறித்து பேசுவதற்காக போலந்து தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள ஜெலன்ஸ்கி, “இரு நாடுகளின் விவசாயிகளும் ஒருவரையொருவர் அவமதிக்கக்கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நம்மிடையே உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
உக்ரைன் மற்றும் போலந்து இடையே மட்டுமல்லாமல் முழு ஐரோப்பா அளவிலும் தீர்வு தேவை.
விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக விவாதித்து தீர்வு காண்பதற்காக ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டு நிறைவடைய (பிப்ரவரி 24) உள்ள நிலையில், அதற்கு முன்னதாக போலந்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோருடனான சந்திப்பு நடைபெறும் என நம்புகிறேன். இது தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயம்” என்று அவர் கூறியுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: உதயநிதி கூட்டிய தலைமைக் கழகம்… திமுகவின் ‘குறிஞ்சி’ மெசேஜ்!
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அரசு : மகா பஞ்சாயத்துக்கு தயாராகும் விவசாயிகள்!
“ED, சிபிஐ வைத்து கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்”: அமைச்சர் பேட்டி!