மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவடோரியல் கினியாவில் கொரோனாவை விடவும் வீரியமான மார்பர்க் வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் மனிதர்களை ஓராண்டுக்கும் மேலாக வீட்டுக்குள் அடைத்தது. மேலும் உலக முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 68 லட்சத்தை தாண்டியுள்ளது.
தடுப்பூசிகளின் வீரியத்தில் கொரோனா நோய் தொற்றின் அபாயம் குறைந்தபோதும், அது ஏற்படுத்திய அச்சுறுத்தல் தாக்கம் அதற்கு நிகரான தொற்றுகள் குறித்த அறிவிப்புகள் வெளிவரும்போது மக்களிடம் அப்படியே தொடர்கிறது.
90 சதவீதம் உயிரிழப்பு
இந்நநிலையில் தான் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவடோரியல் கினியாவில் முதன்முறையாக மார்பர்க் வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
கினியாவில் இதுவரை 10க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கியுள்ள மார்பர்க் வைரஸ் ஒப்பீட்டளவில் கொரோனா திரிபு ரகத்தை விடவும் வீரியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாததில், இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளோனோரில் 90% பேர் உயிரிழந்து வருகின்றனர்.
மார்பர்க் வைரஸ் தோற்றம்
1967ம் ஆண்டு ஜெர்மனியில் மார்பர்க் மற்றும் பிராங்பேர்ட் நகரங்களில் தான் மார்பர்க் வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர், இது அங்கோலா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்கு மேலும் பரவியது.
கடந்தாண்டும் இதே போல ஆப்பிரிக்க தேசமான கானாவில் மார்பர்க் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. எனினும் தொடக்கத்திலே அடையாளம் காணப்பட்டு, உலக சுகாதார அமைப்பு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் குறைந்த உயிர்ப்பலிகளோடு தப்பியது கானா.
எபோலா – மார்பர்க் தொடர்பு
இந்நிலையில் தான் தற்போது கினியாவில் வேகமாக பரவி வருகிறது. அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த மார்பர்க் வைரஸ் ஆனது எபோலா வைரஸ் தோன்றிய ’ஃபிலோவைரஸ்’ குடும்பத்தை சேர்ந்தது.
அதிக காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலி, வாந்தி, ஒரு வாரம் வரை நீடிக்கக்கூடிய கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு என எபோலாவுக்கு உரிய அனைத்து அறிகுறிகளும் மார்பர்க் வைரஸ் தாக்கியவருக்கும் ஏற்படுகிறது.
விலங்குகளிடமிருந்து மனிதருக்கு பரவியதாக சொல்லப்படும் இந்த வைரஸ், பழந்தின்னி வௌவால் வசமிருந்தே தோன்றியிருக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மார்பர்க் பரவும் காரணம்
ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வேகம் அதிகம் என்பது மார்பர்க் வைரஸின் கவலைக்குரிய விஷயமாகும்.
இது தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் இரத்தம், எச்சில், அல்லது பிற உடல் திரவங்கள் மற்றும் அசுத்தமான ஊசி உள்ளிட்ட மருத்துவ பொருட்களை நேரடி தொடர்பு கொள்வதன் மூலம் மார்பர்க் மனிதனுக்கு மனிதனுக்கு பரவுகிறது. நோய் தொற்று தாக்குதலில் இறந்தவர் சடலத்தின் வாயிலாகவும் இந்நோய் பரவுகிறது.
மேலும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக மார்பர்க் தொற்றிலிருந்து உயிர் பிழைத்தாலும் அவர்களது உடலில் சுமார் ஒரு வருடம் வரை வைரஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று பாதிப்பை கண்டறியும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை வாயிலாகவே மார்பர்க் வைரஸ் பாதிப்பும் இதுவரை அடையாளம் காணப்பட்டு வருகிறது.
ஈகுவேடோரியல் கினியாவில் கண்டறியப்பட்டிருக்கும் மார்பர்க் வைரஸ் இதுவரை 10க்கும் மேற்பட்டோரை கொன்றுள்ள நிலையில், தொற்றுக்கு ஆளான 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தடுப்பூசி இல்லை?
தற்போது வரை தடுப்பூசிகள் அல்லது வைரஸ் தடுப்பு சிகிச்சைகள் எதுவும் அங்கீகரிக்கப்படவில்லை. இந்நிலையில் தாமதமாக கண்டறியப்பட்ட பரவலை வேகமாக தடுக்க அவசர நடவடிக்கைகள் மற்றும் உலக நாடுகளுக்கான அறிவுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்து உலக சுகாதார அமைப்பு தீவிரமாக விவாதித்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்கும் டாடா!
பழ. நெடுமாறன் கூற்றை, வசூல் வேட்டையாளர்கள் பயன்படுத்திக் கொண்டு விடுவார்களோ? பதறும் தமிழர்கள்!