ரஷ்யப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தைச் சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் இந்திய ரூபாய் மதிப்பில் 25 கோடி உதவி செய்யப் போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவுடனான போரினால் பொருளாதார ரீதியாக உருக்குலைந்திருக்கும் உக்ரைனை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதற்கு திட்டமிடும் நோக்கில், 61 நாடுகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்களும், உலகளாவிய முதலீட்டாளர்களும் தற்போது லண்டனில் நடக்கும் இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
உக்ரைன் எதிர்பார்க்கும் உதவிகளை திட்டமிடுவதற்காக ‘சர்வதேச உக்ரைன் மீட்பு மாநாடு 2023’ என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 29 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் தனது நிதியாதாரத்தை வலுப்படுத்த தனியார் துறை முதலீட்டாளர்களிடமிருந்து கூடுதல் உதவியை எதிர்பார்க்கிறது.
தற்போது பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட முக்கிய பொது சேவைகளை மேம்படுத்த உக்ரைன் உலக வங்கி கடன்களை பெறுவதற்கு இங்கிலாந்து வழிவகுக்கும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக்,
“ஒரு துடிப்பான, ஆற்றல்மிக்க, ஆக்கபூர்வமான மற்றும் அடங்கிப்போக மறுக்கும் நாடு உக்ரைன். எனவே, எங்கள் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் எதிர் தாக்குதலுக்கான எங்கள் ஆதரவை அளித்து இந்தப் போரில் அவர்கள் வெற்றிபெறும் வரை உக்ரைனுடன் நாங்கள் நிற்போம்” எனக் கூறியுள்ளார்.
மேலும், “மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் புனரமைப்புத் திட்டங்களுக்கு உதவ இங்கிலாந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யும்” என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் 38 நாடுகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், உக்ரைனின் மீட்பு மற்றும் புனரமைப்புக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன. விர்ஜின், சனோஃபி, பிலிப்ஸ், ஹூண்டாய் மற்றும் சிட்டி ஆகிய பல பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தகம், முதலீடு மற்றும் நிபுணத்துவப் பகிர்வு ஆகியவற்றை ஊக்குவிக்க உக்ரைன் வணிக உடன்படிக்கை எனும் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
ராஜ்
இந்திய அரசின் சட்டங்களை மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை: எலான் மஸ்க்
இந்துத்துவமும் இந்திய மொழிகளின் இருத்தலியல் சிக்கல்களும்!