விண்வெளி ஆய்வில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டரை மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
இதையடுத்து , அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகளை அமைக்க ஸ்பேஸ் எக்ஸ் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, செவ்வாயில் குடியிருப்புகளை அமைக்க 40 முதல் 50 ஆண்டுகள் ஆகும் என்று ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஹெவிபூஸ்ட்டர் மீண்டும் வெற்றிகரமாக தரையிறங்கியிருப்பதால் செவ்வாய் குடியிருப்பு திட்டத்தை எலான் மஸ்க் விரைவுப்படுத்தியுள்ளார். இதற்காக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் 12 ஆயிரம் பேர் உழைத்து வருகின்றனர். அதே போல, 2040 ஆம் ஆண்டுக்குள் நாசாவும் செவ்வாய்கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாக, தாங்கள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றி விட வேண்டுமென்பதில் எலான் மஸ்க் குறியாக உள்ளார். செவ்வாய் கிரகத்துக்கு ஒரு முறை 100 பேரை ஏற்றி செல்லும் வகையில் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுகள் கட்டமைக்கப்படவுள்ளன.
ஆனால் மஸ்கின் லட்சியத்துக்கு செவ்வாய்கிரகத்தின் பாழடைந்த நிலப்பரப்பு, உறைபனி வெப்பநிலை, புழுதி புயல்கள் போன்றவை பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை, மனிதர்கள் யாரும் செவ்வாய் கிரகத்தில் இறங்கியதில்லை. செவ்வாய் கிரகத்துக்கும் பூமிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அங்கும் ஒரு நாளில் பகல் வேளை என்பது 12 மணி நேரம்தான்.
மனிதன் வேறு ஒரு கிரகத்துக்கு போக விரும்பினால் செவ்வாய் கிரகம் ஒன்றுக்குத் தான் செல்ல முடியும். ஆகவே தான் வேறு எந்த கிரகத்தையும் விட செவ்வாய்க்கு ஆளில்லா விண்கலங்கள் நிறைய அனுப்பப்பட்டன. சூரிய மண்டலத்தில் பூமியும் செவ்வாயும் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளில் அமைந்துள்ளன. வடிவத்தில் செவ்வாய் கிரகம் பூமியை விடச் சிறியது. செவ்வாய் கிரகத்தில் மலைகள் உள்ளன. வட்ட வடிவப் பள்ளங்கள் நிறைய உள்ளன. நதிகள் ஓடிய தடங்கள் உண்டு. ஆனால் நதிகள் இல்லை. செவ்வாய் கிரகம் வெறும் பொட்டல் போன்றதுதான்.
பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஏவப்பட்ட முதல் விண்கலம் நாசாவின் மரைனர் 4 ஆகும். மரைனர் 4 மொத்தம் 228 நாட்கள் பயணம் செய்து செவ்வாய் கிரகத்தை அடைந்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ரம்யா பாண்டியனுக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஐப்பசி மாத நட்சத்திர பலன்கள் : அவிட்டம் (18.10.2024 முதல் 15.11.2024 )