ட்விட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.660 கட்டணம் வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் தொகைக்கு டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் வாங்கினார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் கேசல் உள்ளிட்டோரை பணியிலிருந்து நீக்கினார்.

முன்னதாக ட்விட்டரில் ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 20 டாலர்கள் வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் எழுந்த நிலையில் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) வசூலிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ப்ளூ டிக் கணக்கிற்கு மாத கட்டணம் செலுத்துபவர்களுக்கு பதில்கள், குறிப்புகள் மற்றும் தேடலில் முன்னுரிமை கிடைக்கும். நீண்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை பதிவிட முடியும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை ப்ளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.
இந்த புதிய நடைமுறை எப்பொழுது வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தகுந்த அளவில் வருவாய் கிடைக்கும் என்று எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ட்விட்டரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 90 சதவிகிதம் ட்விட்டர் பயனர்கள் ப்ளூ டிக்கிற்கு பணம் செலுத்த மாட்டோம் என்றும், 10 சதவிகிதம் பேர் பணம் செலுத்துவோம் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்