ஏர்டெல், ஜியோவுடன் எலான் மஸ்க் ஒப்பந்தம்… இனி என்ன ஆகும்?

Published On:

| By Selvam

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்துடன் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதால், செயற்கைக்கோள் இணையத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இனி வேறு எதுவும் ஆப்ஷனில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே இன்று (மார்ச் 12) எச்சரித்துள்ளார். Elon Musk starlink sign

செயற்கைக்கோள் வாயிலாக பிராட்பேண்ட் சேவையை வழங்கும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் நேற்று (மார்ச் 11) ஒப்பந்தம் செய்த நிலையில், இன்று ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவின் 2 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை அறிவித்துள்ளன.

வேறு எந்த நாட்டிலும் இதுபோன்று நடக்காது. செயற்கைக்கோள் இணையத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஸ்டார்லிங்க்கை தவிர வேறு ஆப்ஷனில்லை. அமெரிக்க சூப்பர் அதிபர் எலான் மஸ்க்கை மோடி சந்தித்தபோது அவர் இதனை கட்டாயப்படுத்தினாரா?

எலான் மஸ்க் மற்றும் அமெரிக்காவிற்கு மோடி அரசு இந்த அளவுக்கு வளைந்து கொடுப்பது நமது உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறது.

மேலும், ஐரோப்பாவில் ஜனநாயகங்களில் தலையிடவும், அவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் மஸ்க் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். மோடியின் ஆதரவுடன் இந்தியாவிலும் அவர் அதையே செய்யப் போகிறாரா என்ற கேள்விகளை எழுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பிப்ரவரி 14-ஆம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சென்று அந்நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் தொழிலதிபருமான எலான் மஸ்க்கை மோடி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. Elon Musk starlink sign

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share