அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்திய அரசின் சட்டங்களை மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜாக் டொர்சி கடந்த வாரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவில் 2020-21ஆம் ஆண்டில் நடந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு கணக்குகளை ட்விட்டர் தளத்தில் இருந்து நீக்குமாறு இந்திய அரசு ட்விட்டர் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.
அதேபோல், அரசை விமர்சிக்கும் ட்விட்டர் கணக்குகளையும் நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இந்தியாவில் உள்ள ட்விட்டர் நிறுவனங்கள் மூடப்படும் என்றும், ட்விட்டர் நிறுவன த்தினர் வீடுகளில் சோதனைகள் நடைபெறும் என்றும் இந்திய அதிகாரிகள் மிரட்டினர்” என்று ஜாக் டொர்சி கூறியிருந்தார்.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திய அரசு மீது குற்றஞ்சாட்டியது குறித்து ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரும், டெஸ்லா தலைவருமான எலான் மஸ்க்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “உள்நாட்டு சட்டத் திட்டங்களைப் பின்பற்றுவதை தவிர ட்விட்டருக்கு வேறு வழியில்லை. அமெரிக்காவில் உள்ள சட்டங்களை ஒட்டுமொத்த உலகத்துக்கும் பொருத்திப் பார்க்க முடியாது.
ஒவ்வொரு அரசாங்கத்துக்கும் வெவ்வேறு சட்டத் திட்டங்கள் உள்ளன. சட்டப்படி கருத்து சுதந்திரத்தை சிறந்த முறையில் அளிக்க நாங்கள் எங்களால் முயன்ற முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று பதிலளித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடியை எலான் மஸ்க் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், ஒவ்வொரு அரசின் சட்டங்களை மதிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று எலான் மஸ்க் கூறியுள்ளது பேசுபொருளாகி வருகிறது.
ராஜ்
மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க கே.என்.நேரு அறிவுறுத்தல்!
கிச்சன் கீர்த்தனா: கோதுமை பிரெட் – பனீர் சாண்ட்விச்