ட்விட்டரை பின்பற்றும் ஃபேஸ்புக்

இந்தியா

ட்விட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாத சந்தா வசூலிக்கப்பட்டதைப் போல ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் ப்ளூ டிக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ஆம் தேதி 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செனகல், சட்ட தலைவர் விஜய் காடா உள்ளிட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.

புதிய ட்விட்டர் கொள்கையில் பேச்சு சுதந்திரம் உள்ளது. எதிர்மறையான வெறுக்கத்தக்க ட்வீட்கள் நீக்கப்படும். என்று எலான் மஸ்க் அறிவித்தார்.

மேலும் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் மாதம் 8 டாலர் செலுத்த வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்தார். 8 டாலரானது இந்திய மதிப்பில் ரூ.661 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கட்டணம் செலுத்துபவர்களுக்கு நீண்ட ஆடியோக்கள் மற்றும் வீடியோக்கள் பதிவேற்ற அனுமதி அளிக்கப்படும். பதிலளித்தல், தேடுதல் மற்றும் விளம்பரங்கள் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

மஸ்க்கின் இந்த அறிவிப்பிற்கு ட்விட்டரில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஸ்டீபன் கிங் போன்ற முன்னணி எழுத்தாளர்கள் எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கையை கடுமையாக சாடினர். இதனால் பலரும் ட்விட்டரிலிருந்து பேஸ்புக்கிற்கு மாறினர்.

இதனால் பலரும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் பெயரில் போலி கணக்குகளை துவங்கியதால் ப்ளூ டிக் கட்டணம் பெறுவது கடந்த ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து நவம்பர் 29-ஆம் தேதி முதல் ப்ளூ டிக் கட்டணம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ப்ளூ டிக்கானது மூன்று நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கம் தொடர்பான ட்விட்டர் கணக்குகளுக்கு சாம்பல் நிறமும், நிறுவனங்களுக்கு தங்க நிறமும், தனிப்பட்ட நபர்களுக்கு நீல நிறமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

எலான் மஸ்க்கின் ப்ளூ டிக் சர்ச்சை முடியாத நிலையில், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் என்று மெட்டா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த வாரம் முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்களுக்கு மாத சந்தா வசூலிக்கப்படும். இணையத்தில் மாதத்திற்கு 11.99 டாலர் மற்றும் ஆப்பிள் ஐபோன்களில் மாதத்திற்கு 14.99 டாலர் சந்தா வசூலிக்கப்படும். ப்ளூ டிக் பெற விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் அடையாள அட்டையை சமர்ப்பித்து ப்ளூ டிக் பெறலாம். இந்த வாரம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ப்ளூ டிக் பெறுவதன் மூலம் பயனர்கள் கூடுதல் பாதுகாப்பை பெறுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மார்க் சக்கர்பெர்க்கின் இந்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ட்விட்டரில் ப்ளூ டிக் வைக்க பணம் வசூலிக்கிறார்கள் என்பதால் தான் ஃபேஸ்புக்கிற்கு மாறினோம். ஆனால் இங்கேயும் ப்ளூ டிக் வைக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்கிறார்கள்.

மெட்டாவின் இந்த அறிவிப்பு குறித்து ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்த புகைப்படத்திற்கு எலான் மஸ்க் சிரிக்கும் ஸ்மைலியை பகிர்ந்துள்ளார். இந்த மீம்ஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

செல்வம்

மயில்சாமி இறுதி ஊர்வலம் துவங்கியது!

விபத்திற்கு முன்பே சேதமடைந்திருந்த மோர்பி பாலம்: விசாரணை அறிக்கையில் பகீர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *