பெட்ரோல் விலைக்கு பயந்து பலரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பைக் என்று மாறி வருகிறார்கள். ஆனால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினாலும் பல பிரச்னைகள் வரத்தான் செய்கிறது.
தீ விபத்து ஏற்படுவது, சார்ஜ் குறைவாக நிற்பது என பல குறைபாடுகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலும் உள்ளன. இதனால், அடிக்கடி வாடிகையாளர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடத்தில் சென்று சண்டையிடுவது, ஆத்திரத்தில் ஸ்கூட்டருக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடப்பது உண்டு.
அந்த வகையில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மட்டும் கடந்த ஒரே ஆண்டில் 10 ஆயிரம் புகார்கள் நாடு முழுவதும் நுகர்வோர் குறை தீர்ப்பு மையத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் 1 லட்சத்து 27 ஆயிரம் கொடுத்து புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். வாங்கி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், எப்போது சார்ஜ் போட்டாலும் ‘உங்கள் ஸ்கூட்டர் உறங்கிக் கொண்டிருக்கிறது ‘ என்று டிஸ்பிளேவில் காட்டியுள்ளது. ஒரு முறை கூட சார்ஜ் போட முடியவில்லை. இதனால், ராஜேஷ் கடுப்படைந்தார்.
தொடர்ந்து , நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மையம், ஸ்கூட்டர் விலையான 1.27 லட்சத்தை 10 சதவிகித வட்டியுடன் வழங்க உத்தரவிட்டது. அதோடு, வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 1 லட்சம் இழப்பீடும் வழக்கு செலவுத் தொகையாக 20 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டது.
தீர்ப்பளிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் பணம் வழங்கப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு மாதத்துக்கும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?
ஜார்க்கண்ட் – வயநாடு : காலை 9 மணி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்!