புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமனம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. election commissioner Gyanesh Kumar
நாட்டின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக தற்போது பணியாற்றி வரும் ராஜீவ் குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு வயது 65.
இந்த நிலையில் டெல்லி பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான தேர்வுக் குழு நேற்று இரவு கூடியது. அப்போது ராகுலின் எதிர் கருத்தையும் மீறி அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரின் பெயரை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது.
அடுத்த சிலமணிநேரங்களில் அவர் ஒப்புதல் அளித்த நிலையில், உடனடியாக நாட்டின் 26வது புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம், 2023 (சட்டம் எண். 49/2023) இன் பிரிவு 4-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பிப்ரவரி 19, 2025 முதல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமிப்பதில் குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என்று சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் என்ற சர்ச்சைக்குரிய பெருமையை பெற்றுள்ளார்.
பதவிகாலம் எப்போது வரை?
நாட்டில் தலைமை தேர்தல் ஆணையரின் பதவிகாலம் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜுவ் குமார் இன்று ஓய்வுபெறும் நிலையில், ஞானேஷ்குமார் பதவியேற்க உள்ளார்.
இவர் வரும் 2029, ஜனவரி 26 ஆம் தேதி வரை தனது பதவியை தொடர்வார். அதாவது அடுத்த மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.